நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் - சஜித் பிரேமதாச



பண்டைய காலம் தொட்டு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டைப் பாதுகாத்தது போல், தற்போதைய சவால்களையும் எதிர்கொண்டு நமது நாட்டின் இறையாண்மையைத் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு கங்காராம விகாரையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'வெசாக் வலயம்' ஆன்மீக நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

வரலாறு நெடுகிலும், பண்டைய காலம் தொட்டு பல்வேறு சவால்கள் நாட்டிற்கு வந்த தருணங்களில் எல்லாம் அப்போதைய அரசர்களும் அமைச்சர்களும் ஒன்றிணைந்து நின்று நாட்டைப் பாதுகாத்தனர். ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்து, இறையாண்மை மிக்க நாடாகச் செயல்பட்டு வரும் இந்தத் தருணத்தில், அந்த இறையாண்மையைத் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் ஒன்றாய் இணைந்து செயலாற்ற வேண்டும். இதன் பொருட்டு சகல தரப்பினரும் கைகோர்த்து இந்நாட்டைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

புத்த தர்மத்தின் உயர்வுக்காகவும், அதன் நிலைபேறு தன்மைக்காகவும் முன்னெடுக்கப்படும் சமயச் செயற்பாடுகள் தற்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக அமைந்துள்ளன. மறைந்த கலபொல ஞானேஸ்வர தேரர் பல கடினமான பாதைகளைக் கடந்து இந்த கங்காராம விகாரையை அபிவிருத்தி செய்தார்.

தற்போது அஸ்ஸஜி நாயக தேரரின் சிறந்த தலைமையில் அந்தப் பணிகள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இந்த உன்னத வெசாக் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், புத்த பெருமானின் மும்மங்கள நிகழ்வுகளை மனதிருத்தி, நன்மைகளை நிலைநிறுத்துவதற்கும் சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும் நாம் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதைப் போலவே நாட்டின் ஒருமைப்பாடு, ஆள்புல ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரம் என்பவற்றையும் எவ்வித சமரசமுமின்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.