
தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களை அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தினாலும், தவறான பொருளாதார முகாமைத்துவத்தினாலும் மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. எரிபொருள் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால், சாதாரண மக்கள் எதிர்காலத்தில் மாட்டு வண்டிகளில் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் எச்சரித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
சுபீட்சமான வாழ்வை எதிர்பார்த்து, அதற்காகப் போராடி, ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்றத்தை நோக்கிச் சென்று, மக்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகளையும், மண்கொள்ளைகளையும் ஒழிப்போம் என்று மேடை தோறும் முழங்கியவர்கள், இன்று எவரையும் தண்டிக்கவில்லை. மாறாக, அனைவரையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கையே கொண்டுள்ளனர். இந்த அரசாங்கத்துக்கு மக்களுக்கு நிவாரணம் வழங்க விருப்பமும் இல்லை, அதற்கான எண்ணமும் கிடையாது.
1931 ஆம் ஆண்டின் பௌத்த சாசன சட்டத்தைத் திருத்த இவர்கள் முற்படுகிறார்கள். இந்தச் சட்டத்தில் இப்போது என்ன திருத்தம் செய்ய வேண்டியுள்ளது? பௌத்த சாசனத்தை முழுமையாக அழித்து, மகா சங்கத்தினரை அரசாங்கத்தின் அடிமைகளாக மாற்றிக்கொள்வதே இவர்களின் சூழ்ச்சி. இது புலம்பெயர் அமைப்புகளின் சதியா, அரச சார்பற்ற நிறுவனக் காரர்களின் சதியா அல்லது அரசாங்கத்தின் சதியா என மக்கள் சிந்திக்க வேண்டும்.
அன்று இந்த அரசாங்கத்தைக் கொண்டுவருவதற்காக வீடு வீடாகச் சென்ற மகா சங்கத்தினர், இன்று மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? சில தேரர்கள் பணத்துக்கு அடிமையாகி அரசாங்கத்தின் அநீதிகளுக்குத் துணைபோகின்றார்கள். பௌத்த சாசனத்தை அழிப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என்று பௌத்த மக்களிடம் நான் மிகுந்த மரியாதையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நாட்டு மக்கள் தித்வா போன்ற இயற்கை அனர்த்தங்களைச் சந்தித்த வேளைகளில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட இந்த அரசாங்கம் செய்துகொடுக்கவில்லை. டீசல் விலை அதிகரிப்பால் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஏழை மக்கள் ஒரு தேநீர் அருந்தக் கூட வழியில்லாத, பேருந்தில் பயணிக்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்போதே நிலைமை இப்படி என்றால், இன்னும் சில காலத்தில் வரலாற்றில் பயன்படுத்திய மாட்டு வண்டில்களில் தான் மக்கள் பயணிக்க நேரிடும். இந்த நிலையை நோக்கித்தான் அரசாங்கம் மக்களைக் கொண்டு செல்கிறது.
அரசாங்கத்தின் மிக மோசமான அரசியல் நாடகங்களை, குறிப்பாக இந்த மலசல கூட விவகாரத்தைப் பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. மக்கள் உங்களை நாட்டை ஆளவே தேர்ந்தெடுத்தனர், மலசல கூடங்களைக் கட்டியெழுப்ப அல்ல. பாராளுமன்ற உறுப்பினர் 'அம்பிகா' போன்றவர்கள், மலசல கூடங்களுக்கு அடிக்கல் நாட்டுவதையே பெரும் சாதனையாகக் கூறிக்கொண்டு திரிகின்றனர். மலசல கூடங்களைக் கட்ட ஒப்பந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அதற்கு நீங்கள் அடிக்கல் நாட்ட வேண்டிய அவசியமென்ன?
மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள், இன்று மலசல கூடங்களின் உரிமையாளர்களாக மாறியுள்ளனர். மலசல கூடங்களின் துர்நாற்றம் இவர்களின் அரசியலிலும் வீசுகிறது. உங்களின் இந்த நடிப்புத்திறன் மற்றும் மலசல கூட அரசியல் நாட்டுக்கே அவமானமாகும். மலசல கூடங்களுக்குச் சென்று அடிக்கல் நாட்டுவதை நிறுத்திவிட்டு, நாட்டைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்ப முடியாவிட்டால், தயவுசெய்து பதவி விலகிச் செல்லுங்கள் என்றார்.







.jpg)




