
நமது நாட்டிற்குத் தேவையான எதிர்காலத் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டுமாயின், அழகியல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகள் ஊடாகக் கிடைக்கும் அனுபவத்தை ஆரம்பக் கல்விப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
குருணாகல் மாவட்டத்தில் கல்விசார் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட பிரதமர், நேற்று முன்தினம் பொல்பிதிகம தேசிய பாடசாலையில் நடைபெற்ற "புஞ்சி ஹப்பன்னு 2026" ஆரம்பப் பிரிவு இலக்கியத் திறன் மதிப்பீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
பொல்பிதிகம வலயக் கல்விப் பணிப்பாளரின் எண்ணக்கருவிற்கு அமைய, குறித்த வலயத்திலுள்ள 49 ஆரம்பப் பாடசாலைகளின் மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற "புஞ்சி ஹப்பன்னு 2026" மொழி மற்றும் இலக்கியத் திறன் போட்டிகளில் வெற்றிகொண்ட மாணவர்களைக் கௌரவிப்பதற்காக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 17 வகையான போட்டிப் பிரிவுகளின் கீழ் வெற்றிகொண்ட மாணவர்களின் அழகியல் செயற்பாடுகளால் இவ்விழா மெருகூட்டப்பட்டது.
போட்டிகளில் வெற்றிகொண்ட மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கான சான்றிதழ்கள் பிரதமரின் தலைமையில் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
பொல்பிதிகம கல்வி வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, முழு நாட்டிற்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். ஆரம்பக் கல்வி என்பது மிகப் பரந்த எல்லைகளைக் கொண்ட ஒரு துறையாகும். ஒரு பிள்ளையைச் சரியான பாதையில் வழிநடத்துவதற்கு, ஆரம்பக் கல்வி மூலம் வழங்கப்படும் அடிப்படை அத்திவாரம் மிக முக்கியமானது. ஒரு பிள்ளைக்கு ஆரம்பக் கல்வியைப் பயிலும் வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கிறது. ஆகையினால் அதை நாம் பிள்ளைக்குச் சரியான முறையில் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
பொல்பிதிகம கல்வி வலயப் பிள்ளைகள் தமது அழகியல் திறமைகளை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தியதை இன்று நாம் கண்டோம். அதுபோலவே, முழு இலங்கையிலும் மறைந்திருக்கும் திறமைகளைக் கொண்ட பிள்ளைகளுக்குத் தமது ஆற்றல்களை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் ஒரு கல்வி முறையை உருவாக்கவே நாம் முயற்சி செய்து வருகின்றோம்" என தெரிவித்தார்.





.jpg)






