.jpeg)
அரசாங்கத்தின் முறைமை மாற்றமும் கொள்கைகளும் சரியான பாதையில்தான் செல்கின்றன என்றால், அதற்குரிய மக்கள் கருத்தை அறிந்துகொள்வதற்காக உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்குச் சவால் விடுத்துள்ளார்.
துறைமுக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டின் துறைமுக அபிவிருத்தி மற்றும் வர்த்தகத் துறையில் சிறந்த சூழலை உருவாக்குவோம் எனக் கூறி தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போதிலும், இன்றுவரை அவ்வாறானதொரு சூழல் உருவாக்கப்படவில்லை. நமக்குச் சொந்தமான கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் விரைவான அபிவிருத்தி முடக்கப்பட்டு, பல்வேறு சக்திகளின் செல்வாக்கினால் அது செயலற்ற நிலையை அடைந்துள்ளது.
மூன்று முனையங்கள் முறையான உபகரணங்களுடன் இயங்க வேண்டிய தருணத்தில், தற்சமயம் ஒன்று மாத்திரமே இயங்கி வருகின்றது. அத்துடன், பொறுப்பான பதவிகளுக்குத் தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டு, அவர்களின் சலுகைகளும் வெட்டப்பட்டுள்ளன.
இன்று நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. மக்கள் கருத்தைக் கேட்டறிய அஞ்சாமல் அரசாங்கம் விரைந்து தேர்தலை நடத்த வேண்டும். அன்று எதிர்க்கட்சியில் இருந்தபோது மாகாண சபைத் தேர்தலுக்காகப் போராடிய தற்போதைய பிரதமர், இன்று அதனை ஒத்திவைப்பதற்காகப் பல்வேறு தந்திரோபாயங்களைக் கையாண்டு வருகிறார். இனியேனும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்காமல், தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.





.jpg)






