இசை நிகழ்ச்சிகளுக்குப் பொலிஸார் தடை விதித்துள்ளதாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்: பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கம்!


 இலங்கையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பாடல்களைப் பாடுவதற்குப் பொலிஸார் தடை விதித்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை மற்றும் தவறானவை எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சாவகச்சேரி, நாவற்குழி பகுதியில் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில், நாட்டில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் பாடல்களைப் பாடியமை மற்றும் அது தொடர்பான காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பரப்பியமை குறித்து யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாகக் கடந்த ஜூன் மாதம் 02 ஆம் திகதி கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, சந்தேகநபர் அந்த இசை நிகழ்ச்சியில் தான் பாடிய இரண்டு பாடல்களைத் தானே திருத்தி, விடுதலைப் புலிகள் அமைப்பைப் பெருமைப்படுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவான உள்ளடக்கங்களை உள்ளடக்கி, அதனைப் பலரும் பார்க்கும் வகையில் அவர் திட்டமிட்டுப் பரப்பியுள்ளார் எனப் புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் செயல் 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 3 (ஜி) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், சந்தேகநபர் கடந்த ஜூன் 03 ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, வரும் ஜூன் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, இலங்கையில் இசை நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடுவதற்குப் பொலிஸார் தடை விதித்துள்ளதாகச் சில சமூக வலைத்தளங்களில் தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவை முற்றிலும் உண்மைக்குப்புறம்பானவை என மறுத்துள்ள பொலிஸார், நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தற்போது நடைமுறையிலுள்ள ஏனைய சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்துச் செயல்பட வேண்டிய பொறுப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பதைப் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.