இலங்கை மருத்துவத் துறையின் புதிய சாதனை – AI ரோபோ அறுவை சிகிச்சை!


 

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு இலங்கை மருத்துவத் துறை புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பில் உள்ள ஆசிரி சேர்ஜிகல் தனியார் வைத்தியசாலையில், நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விசேட நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களால் இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில், ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவருக்கு கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சையும், மற்றுமொரு நோயாளிக்கு சிக்கலான சிறுநீரக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர்களின் விளக்கங்களின்படி, இந்த ரோபோட்டிக் முறைமை தன்னிச்சையாக அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளாது. மாறாக, முழுமையாக அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்குகிறது.

சிறப்பு கன்சோல் ஒன்றின் மூலம் மருத்துவர்கள் ரோபோட்டிக் கரங்களை இயக்குகின்றனர். இந்த கரங்கள், மருத்துவரின் கை அசைவுகளை மிகத் துல்லியமாக பிரதிபலித்து, நுணுக்கமான அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகின்றன.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட நிரலாக்க தொழில்நுட்பங்களின் இணைப்பு மூலம், இந்த முறைமை மிகத் துல்லியமான இயக்கங்களை மேற்கொள்ளக் கூடியதாக இருப்பதுடன், சிக்கலான அறுவை சிகிச்சைகளின் துல்லியத்தையும் மேம்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோபோட்டிக் உதவியுடனான அறுவை சிகிச்சைகள் பல்வேறு நன்மைகளை வழங்குவதாக குறிப்பிட்ட அசிரி அறுவை சிகிச்சை மருத்துவமனையின் தலைமை செயல்பாட்டு அதிகாரி, வைத்தியர் சமந்தி டி சில்வா, இம்முறையில் இரத்த இழப்பு குறைதல், சிறிய அளவிலான வெட்டுக்களுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல், தொற்று ஏற்படும் அபாயம் குறைதல், நோயாளிகள் விரைவாக குணமடைதல், அறுவை சிகிச்சை பிழைகளுக்கான சாத்தியம் குறைதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக் தொழில்நுட்பங்களின் பயன்பாடு இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல மேம்பட்ட மருத்துவ சேவைகளுக்கு இது வழிவகுக்கும் எனவும் மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.