சுரேஷ் சலேயின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனைவி மீண்டும் முறைப்பாடு


அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சாலே, தனது கணவரது அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மீறப்படுவதாகக்குற்றம் சாட்டி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேலுமொரு முறைப்பாட்டை அளித்துள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சுரேஷ் சலேவுக்கும், அவரது வழக்கறிஞர் அசித சிறிவர்தனவுக்கும் இடையே புதன்கிழமை (8) நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த உரிமைகள் மீறப்பட்டதாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

சுரேஷ் சலே தனது சட்டத்தரணியை வாரத்திற்கு ஒரு தடவை, வெறுமனே 20 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுவதோடு மருத்துவமனையில் இருந்த குற்றப் புலனாய்வு குறித்த தினத்தில் அதிகாரிகளால் அன்றைய சந்திப்பு தடை செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் குறித்த தடை செயற்படுவதாகக்கூறியுள்ள குற்றப்புலனாய்வு அதிகாரிகள், சட்டத்தரணிக்கும் அவரது கட்சிக்காரருக்கும் இடையேயான இரகசியக் கலந்துரையாடல் முழுவவதையும் சலே இருந்த இடத்திலேயே நடைத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது என்றும் சலேயை தனிப்பட்ட முறையில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள அதிகாரிகள் மறுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றால் கைதிகளுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட நியாயமான விசாரணை, சட்டப் பிரதிநிதித்துவத்திற்கான அடிப்படை உரிமையை இந்த நடவடிக்கை அப்பட்டமாக மீறுகிறது என்றும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாகத் தலையிடுமாறும், அதிகாரிகளின் மேற்பார்வையின்றி தனது கணவருக்கு ஒரு சட்டத்தரணியை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குமாறும், மேலும் இரகசியமான கலந்துரையாடல்களை உறுதிப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடத்துமாறும் அவர் மனித உரிமைகள் ஆணையகத்தைக் கேட்டுக்கொள்வதாகவும் வலியுறுத்தியுள்ளார்.