அதிக விலை, காலாவதியான பொருட்கள் விற்பனை : காலி முகத்திடலில் விசேட சுற்றிவளைப்பு - முறைகேட்டில் ஈடுபட்ட வியாபாரிகள் சிக்கினர் !



கொழும்பு கோட்டை பொலிஸாரின் ஒத்துழைப்புடன், நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) நேற்று (திங்கட்கிழமை) காலி முகத்திடல் பகுதியில் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விற்பனையாளர்களை இலக்காகக் கொண்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தது.

இந்த நடவடிக்கையின் போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ததுடன், காலாவதியான பொருட்களையும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்த வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டதாக CAA தெரிவித்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என CAA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் தமது முதன்மை நோக்கங்களாக இருப்பதாக வலியுறுத்தியுள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை, இத்தகைய முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் அமுலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.