ரணில் அரசின் கொள்கையைவிட தற்போதைய அரசு மோசமாக செயற்படுகிறது – சஜித் பிரேமதாச


தேர்தல் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தைத் திருத்தியமைப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றிய அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம், தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்தையும் தாண்டி தீவிர வலதுசாரி புதிய தாராளவாதக் கொள்கையைப் பின்பற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டுள்ளார்.

பன்னல, தலம்மெஹர பதிரண மண்டபத்தில் நடைபெற்ற திங்கட்கிழமை (13) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'நாட்டு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதாக கடந்த தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் சக்தியும் கூறியிருந்தன. ஆனால், இன்று ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி அவை அனைத்தையும் மறந்துவிட்டு, ரணில் விக்ரமசிங்கவின் ஒப்பந்தத்தையும் விஞ்சும் வகையில் செயற்பட்டு வருகிறது.

நாணய நிதியம் கூறுவதற்கும் அப்பால் சென்று, அதன் நிபந்தனைகளைத் தீவிரமாகத் திருத்தி, ஒப்பந்தத்தில் உள்ளதை விட அதிக வரிகளை தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது விதித்து வருகிறது.

நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்துக்கமைய முதன்மைக் கணக்கு இருப்பு 2.3 சதவீதமாக இருக்க வேண்டும் என்றுள்ள போதிலும், தற்போதைய அரசு அதனை 5.4 சதவீதம் வரை கொண்டு சென்றுள்ளது.

நாட்டின் மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, உழைக்கும் மக்களின் மூலதனச் செலவினங்களை குறைத்தே இந்த இலக்கை அவர்கள் அடைந்துள்ளனர். அரசாங்கத்தின் தேவையெல்லாம் நாணய நிதியத்தின் செல்லப்பிள்ளையாக மாறி, கிண்ணத்தை வெல்வது மட்டுமேயாகும்.

மக்களைப் பொய் மற்றும் ஏமாற்று மாயைகளால் வீழ்த்திய இந்த அரசாங்கம், மறுபுறம் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைச் சீர்குலைத்து, நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது.

ஜனநாயகத்தின் முக்கிய தூணான நீதிமன்றத்தைத் தன் கைக்கூலியாக மாற்ற இந்த அரசு பார்க்கிறது. உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் பதவ வெற்றிடங்களை நிரப்பாமல் இருப்பதற்கும், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, இப்போது நீதிமன்றத்தின் சுதந்திரத்தில் கைவைக்க முற்படுகிறது.

எதனைப் பற்றியும் முறையான புரிதல் இல்லாத ஒரு அரசாங்கமாகவே இது இயங்கி வருகிறது. இன்று விவசாயிகள் வீதிக்கு இறங்கி நெல்லுக்கான நிலையான விலையைக் கோரி வருகின்றனர்.

கல்வி முறையை மாற்றுவோம் என்று கூறி, 41 இலட்சம் இலவசக் கல்வி கற்கும் பிள்ளைகளின் முக்கிய பாடமான வரலாற்றுப் பாடத்தைத் தொடர்வதைக் கூட அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சர்வதேசக் கொள்கைகளை மறந்துவிட்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களை 6 முதல் 13 ஆம் வகுப்பு வரை சிங்கள மொழியிலேயே முடக்கியுள்ளனர்.

அதேபோல், அன்று ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கும் போது அவற்றை விமர்சித்து, தீக்கிரையாக்க நடவடிக்கை எடுத்தவர்களே இன்று ஆட்சியில் உள்ளனர்.

இதன் விளைவாக, இன்று நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகள் கூட பாதுகாப்பற்ற சூழல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.