
மட்டக்களப்பு நகரின் இரண்டாவது பிரதான பாலமான புதுப் பாலம் அண்மையில் (28.06.2026) சேதமடைந்ததைத் தொடர்ந்து, அதற்குப் பதிலாக அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தின் நிர்மாணப் பணிகள் நேற்று (09) மாலை நிறைவடைந்தன. இதையடுத்து, இன்று (10) காலை 9.00 மணி முதல் பொதுமக்களின் போக்குவரத்திற்காக அந்தப் பாலம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் இந்தத் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்தப் பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பாலத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றி, மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நிரந்தர புதிய பாலம் அமைக்கப்படும் வரை கனரக வாகனங்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தற்காலிக பாலத்தை மிகக் குறுகிய காலத்தில் அமைத்து மக்களின் இயல்பு போக்குவரத்தை மீளக் கொண்டுவர இரவும் பகலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அரச அதிகாரிகள், பொறியியலாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோர் தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.





.jpg)

.jpg)





.jpg)