அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து நாடளாவிய நிதி மோசடி – நலன்புரி நன்மைகள் சபை அவசர எச்சரிக்கை
'அஸ்வெசும' நலன்புரித் திட்டப் பயனாளர்களின் பணத்தைச் சூறையாடும் நோக்கில், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை விசேட அறிவிப்பு ஒன்றின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அஸ்வெசும பயனாளர்களைப் பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளும் மோசடியாளர்கள், தங்களை நலன்புரி நன்மைகள் சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் என அறிமுகப்படுத்துகின்றனர்.
பயனாளர்களின் விபரங்களைப் புதுப்பிப்பதாகக் கூறியோ அல்லது வேறு ஏதேனும் போலியான காரணங்களைக் குறிப்பிட்டோ, பயனாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகைப் பணத்தை இந்த மோசடியாளர்கள் கோரி வருகின்றனர்.
இந்தத் தொலைபேசி அழைப்புகளுக்கும் நலன்புரி நன்மைகள் சபைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் சபையின் அனுமதியோ அல்லது அறிவோ இன்றி முன்னெடுக்கப்படும் முற்றிலும் சட்டவிரோதமான மோசடிச் செயல்களாகும்.
மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சபை பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இவ்வாறான போலி அழைப்புகள் வந்தால், உடனடியாக அது குறித்துப் பயனாளிக்கு மிக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்ய வேண்டும்.
இத்தகைய அழைப்புகளைப் பெற்ற பயனாளர்கள், அந்தந்தப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாகப் புகார் அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அஸ்வெசும திட்டத்துடன் தொடர்புடைய கள அதிகாரிகளும் கிராம மட்டங்களில் இது குறித்து தீவிரக் கண்காணிப்புடன் இருக்குமாறு சபை அறிவுறுத்தியுள்ளது.
அஸ்வெசும பயனாளர்கள் தங்களது தனிப்பட்ட விபரங்களையோ, வங்கி விபரங்களையோ அல்லது பணத்தையோ அறியாத நபர்களுக்குத் தொலைபேசி வழியே வழங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












.jpg)

