பேராதனை, கொழும்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது


பேராதனை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (12) பேராதனை நகருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்து சோதனை நடத்திய போது பேராதனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 400 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 150 கிராம் ஹெரோயின் ஆகியவற்றுடன், போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, கரையோர பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் ஹின்னியப்புஹாமி மாவத்தையில் நடத்திய விசேட சோதனையின் போது கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த சோதனையின் போது, சந்தேக நபரிடமிருந்து 119 கிராம் 680 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் பேராதனை மற்றும் கரையோர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.