மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் மலசலகூட சுகாதார வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் விசனம்





மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கதிர்காமம் செல்லும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் மலசலகூட சுகாதார வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் விசனம் அடைந்துள்ளனர்.

கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவக் கொடியேற்றத் திருவிழா எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மட்டக்களப்பிலிருந்து உகந்தை மலை முருகன் கோவிலுக்கு கடந்த இரு தினங்களாக தினமும் காலையில் 15க்கும் மேற்பட்ட அரச மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும், மட்டக்களப்பு மாநகர சபையினால் பராமரிக்கப்படும் இந்தப் பேருந்து நிலையத்தில் முறையான மலசலகூட மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாததால் பொதுமக்கள், அடியார்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பலமுறை தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்தவொரு நிரந்தர தீர்வும் எட்டப்படவில்லை.

இன்று தமது பயணங்களை மேற்கொண்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள், அடியார்கள், முதியவர்கள், சிறுவர்கள் எனப் பலரும் இந்த அத்தியாவசியத் தேவைகள் இன்றி மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனப் பயணிகள், அடியார்கள் மற்றும் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.