இலங்கையின் சிறைச்சாலை வரலாற்றில், கைதிகளின் தாக்குதலால் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இதற்கு முன் இடம்பெறவில்லை - பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர




இலங்கையின் சிறைச்சாலை வரலாற்றில், நீர்கொழும்பு சிறைச்சாலை உட்பட எந்தவொரு சிறைச்சாலைக்குள்ளேயும் கைதிகளின் தாக்குதலுக்குள்ளாகி அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வரலாற்றுச் சம்பவமொன்று இதற்கு முன்னர் ஒருபோதும் இடம்பெற்றதில்லை என சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று சனிக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

அரசாங்கத்தின் பிழையான அரசியல் அணுகுமுறைகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த அரச கட்டமைப்பும் சீர்குலைந்து, நாடு ஒரு சட்டமற்ற நிலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகும். 146 ஆண்டுகால இலங்கையின் சிறைச்சாலை வரலாற்றில், கடந்த காலங்களில் பல்வேறு கிளர்ச்சிகள் வெடித்த போதிலும் சிறைக்கைதிகளால் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மரணமடைந்த வரலாறே இல்லை. இந்தச் சம்பவம் குறித்துத் தேடியறிய தற்போது ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டாலும், வெளிப்படையாகத் தெரிகின்ற உண்மைகளை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது.

தற்போது நாட்டின் ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பும் முழுமையாகக் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அரசை முறையாகக் கொண்டு நடத்துவதற்கும், அரச இயந்திரத்தைச் சீராக இயக்குவதற்கும் செய்யப்பட வேண்டிய குறைந்தபட்ச மாற்றங்களையாவது செய்திருந்தால் இன்று இவ்வாறானதொரு அவல நிலை நாட்டுக்கு ஏற்பட்டிருக்காது.

தற்போதைய இந்தச் சீர்குலைவு நாட்டின் தேசியப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன் கல்வித்துறை, நீதித்துறை, சுகாதாரத்துறை என மக்கள் நலன் சார்ந்த அனைத்து முதன்மைத் துறைகளும் முற்றாகக் வீழ்ச்சியடைந்துள்ளன.

நாட்டின் கடந்த 1 வருடங்களுக்கும் மேலாக அந்தத் துறைக்கு நிரந்தரமான சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படவில்லை. முறையான தலைமைத்துவம் இல்லாத காரணத்தினாலேயே இன்று இந்த அப்பாவிச் சிறைச்சாலை அதிகாரிகள் தங்கள் உயிர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாகப் பதவியில் இருந்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தான் செய்யாத தவறுக்காக, தேவையற்ற அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, அநியாயமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அநீதியான முறையில் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விதம் மற்றும் அவர் நடத்தப்பட்ட விதம் மனிதநேயமற்றது என்று மனித உரிமைகள் ஆணைக்குழு கூடத் தெளிவுபடுத்தியுள்ளது. ஒட்டுமொத்த அரச கட்டமைப்பும் வீழ்ந்துள்ள இந்த நிலையைத் தான் நாம் 'சட்டமற்ற நிலை' என்று அழைக்கின்றோம்.

நாடு இவ்வாறானதொரு சட்டமற்ற நிலையை நோக்கி நகரும் போது, பாராளுமன்ற எதிர்க்கட்சியானது அரசாங்கத்தின் கடுமையான ஒடுக்குமுறைப் போக்குகளுக்கு அஞ்சி, தங்களுக்குள் ஒருவிதத் தற்காப்புப் பயத்தை வளர்த்துக்கொண்டு அச்சத்துடனேயே அரசியல் செய்து வருகின்றது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது அரசியல் வீரியத்தை முற்றாகக் குறைத்துக் கொண்டுள்ளனர்.

வீதியில் செல்லும் போது ஒரு சிறிய போக்குவரத்து விதியை மீறினால் கூட, அரசாங்கம் தங்களைப் பழிவாங்கிப் பெரிய தண்டனைகளை வழங்கிவிடுமோ என்று அஞ்சும் அளவிற்கு இந்த அச்ச உணர்வு அவர்களை ஆட்கொண்டுள்ளது. ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் எதிர்காலம் குறித்த அரசியல் எதிர்பார்ப்புகள் இருக்கலாம், ஆனால் நாட்டின் குறைந்தபட்ச ஜனநாயகப் பண்புகளையும், ஜனநாயக நிறுவனங்களையும், சமூக அமைதியையும் பாதுகாத்துக் கொள்வது அனைவரதும் முதன்மைக் கடமையாகும் என்றார்.