தெருநாய்களுக்கு உணவளிப்பதுடன் பொறுப்புடன் பராமரிக்கவும் – பொதுமக்களுக்கு அறிவுரை




தெருநாய்களுக்கு உணவளிப்பதை நிறுத்துமாறு தாம் எக்காரணம் கொண்டும் கூறவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் சஞ்சிக பெரேரா தெரிவித்துள்ளார்.

தெருநாய்களுக்கு உணவளிப்பது கருணைமிக்க செயல் என்றாலும், உணவளிப்பது மட்டுமே போதாது என்றும், அவற்றுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்துதல், கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்ளுதல் மற்றும் தேவையான மருத்துவப் பராமரிப்பை வழங்குதல் ஆகிய பொறுப்புகளையும் ஏற்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் ஆண்டுதோறும் 2.5 இலட்சத்திற்கும் அதிகமானோர் நாய் கடியால் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதற்காக அரசாங்கம் வருடத்திற்கு ரூ.1 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த ஆண்டு 14 பேர் வெறிநாய்க் கடியால் (Rabies) உயிரிழந்ததுடன், நாட்டில் இடம்பெறும் சுமார் 30% வீதி விபத்துகளுக்கு தெருநாய்களும் காரணமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வெறிநாயை இலங்கையிலிருந்து ஒழிக்க பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி மற்றும் கருத்தடை திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், தெருநாய்களை பொறுப்புடன் பராமரிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.