சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு அரசாங்கமும் நீதி அமைச்சருமே பொறுப்பேற்க வேண்டும் - சமன் ரத்னப்பிரிய குற்றச்சாட்டு!


முதலாம் நாள் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த போதே நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறியதால், இறுதியில் பெருமளவிலான மரணங்களும் காயமடைதல்களும் ஏற்பட்டுள்ளன. இந்த பேரழிவின் முழுப் பொறுப்பையும் அமைச்சரும் அரசாங்கமும் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலை மோதல் சம்பவத்தின் போது நீதி அமைச்சர் அன்று மாலை வேளையில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க முற்படவில்லை என்பதுடன், பல மணித்தியாலங்களாக அவரது தொலைபேசியுடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலை காணப்பட்டுள்ளது. முதலாவது சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்த நிலையில் மோதல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

எனினும், உரிய வழிகாட்டல்கள் கிடைக்காமையினால், இரண்டாவது சந்தர்ப்பத்தில் இதுவொரு பெரும் பேரழிவாக மாறி 28 முதல் 29 வரையான மரணங்கள் நிகழ்ந்துள்ளதுடன், எட்டு சிறைச்சாலை அதிகாரிகளும் தங்களது உயிர்களை இழந்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் தமக்குரியதா என்பது தனக்குத் தெரியாது என நீதி அமைச்சர் கூறுகின்றார். இதுவொரு பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான கூற்றாகும்.

இவ்வாறானதொரு அவசர சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகளுக்குத் தேவையான கட்டளைகளை வழங்குவதில் நீதி அமைச்சரும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும் முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும். அமைச்சர் உரிய நேரத்தில் அதிகாரத்தை வழங்கவுமில்லை, அவரைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. எனவே, இதில் அமைச்சரின் தரப்பில் அப்பட்டமான தவறிழைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், இச்சம்பவம் நடக்கும் போது சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு நிரந்தர ஆணையாளர் நாயகம் ஒருவர் இருக்கவில்லை. அவ்வாறு ஒருவரை நியமிக்காமல் இருந்ததற்கான பொறுப்பை அமைச்சரும் அரசாங்கமுமே ஏற்க வேண்டும். முதலாம் நாள் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த போதே நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறியதால், இறுதியில் பெருமளவிலான மரணங்களும் காயமடைதல்களும் ஏற்பட்டுள்ளன. இந்த பேரழிவின் முழுப் பொறுப்பையும் அமைச்சரும் அரசாங்கமும் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இச்சம்பவத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் எங்களிடம் பேசுகையில், தங்களுக்கு ஏன் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும், தங்களைச் சுதந்திரமாகச் செயற்பட அனுமதித்திருந்தால் இந்த பெரும் பேரழிவைத் தடுத்திருக்க முடியும் என்றும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டனர். இதன் மூலம் இந்த அரசாங்கமும் நீதி அமைச்சரும் எவ்வித பொறுப்புணர்ச்சியுமின்றி செயற்பட்டுள்ளனர் என்பதும், சிறைச்சாலைத் துறைக்குச் சரியான தலைமைத்துவம் இல்லை என்பதும் மிகத் தெளிவாகப் புலனாகின்றது.

சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு நிரந்தரமான ஆணையாளர் நாயகம் ஒருவரை நியமிக்காமல், பதவியில் இருந்தவரை நீக்கி, அவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அரசாங்கமே திணைக்களத்துக்குள் ஒரு பெரிய குழப்பப் பின்னணியை உருவாக்கியுள்ளது. அரசாங்கத்தின் இத்தகைய நிர்வாகச் சீர்கேடுகளினதும், சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்ளும் அமைச்சர்களின் செயற்பாடுகளினதும் ஒட்டுமொத்த விளைவே இந்தத் துரதிர்ஷ்டவசமான மரணங்களாகும்.

இங்கு கைதிகள் மாத்திரமன்றி, அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய பல இளம் சிறைச்சாலை அதிகாரிகளும் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். சிறைக்கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் எவ்விதப் பெரும் முரண்பாடுகளும் இருக்கவில்லை. இந்தத் தேவையற்ற பிரச்சினை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஒட்டுமொத்த சம்பவத் தொடரின் பொறுப்பிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் தப்பித்துக்கொள்ள முடியாது என்றார்.