இந்த கலவரத்தில் மூன்று கைதிகள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்திருந்தனர்.
இதுவரை 136 சிறை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக CID நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கலவரம் இடம்பெற்ற வேளையில் சிறைச்சாலையில் மொத்தம் 2,417 கைதிகளும் 166 சிறை அதிகாரிகளும் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைகளின்படி, ஜூலை 5ஆம் திகதி உடற்பயிற்சி நேரத்தை அதிகரிக்க கோரிய கைதி ஒருவருக்கும் சிறை அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட மோதலே கலவரத்திற்கு தொடக்கமாக அமைந்ததாக கூறப்பட்டுள்ளது. மறுநாள் குறித்த கைதி மற்றொரு சிறைக் கூடத்தில் இருந்த கைதிகளை தாக்கியதைத் தொடர்ந்து பதற்றம் தீவிரமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கலவரத்தின் போது இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், பின்னர் மேலும் ஒருவர் காயங்களால் உயிரிழந்தார். மேலும் 36 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கைதிகள் சிறை மருத்துவப் பிரிவு மற்றும் நிர்வாகக் கட்டிடத்திற்கும் சேதம் விளைவித்ததுடன், சிலர் சிறைச்சாலை கூரைகளில் ஏறி ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டதாகவும் CID தெரிவித்துள்ளது.
நிலைமை கட்டுப்பாட்டை மீறியதைத் தொடர்ந்து முதலில் கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டதுடன், பின்னர் எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. தொடர்ந்து தாக்குதல் நீடித்ததால், STF அதிகாரிகள் சிறைக்குள் நுழைந்து சிக்கியிருந்த அதிகாரிகளை மீட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்து F-58 ரக துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 271 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட 60 துப்பாக்கிகள் தடயவியல் பரிசோதனைக்காக கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சிறைச்சாலையின் CCTV DVR-கள் மொரட்டுவ பல்கலைக்கழக கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கொலை, ஆயுதச் சட்டம் மற்றும் பொதுச் சொத்து சேதப்படுத்தல் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வழக்கை பரிசீலித்த நீதவான், கலவரம் இடம்பெற்ற போது சிறையில் இருந்த அனைத்து கைதிகளின் அறிக்கைகளையும் சமர்ப்பிக்குமாறும், பின்னர் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறும் CID-க்கு உத்தரவிட்டார்.
வழக்கு மேலதிக விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






.jpg)







