ராஜபக்ஷர்களால் கொள்ளையடிக்கப்பட்ட தமிழ் மக்களின் தங்க நகைகள் எங்கே ? – பாராளுமன்றத்தில் சிறிதரன் MP



ராஜபக்ஷர்களால் கொள்ளையடிக்கப்பட்ட தமிழ் மக்களின் தங்க நகைகள் எங்கே. ஒரு குடும்பம் ஒரு இனத்தின் சொத்தையே கொள்ளையடித்தது. இந்த மோசடி குறித்தும் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழர்களுடைய நகை தானே என்று அலட்சியமாக இருக்க கூடாது. தற்போது மீட்கப்பட்டுள்ள நகைளை தமிழ் மக்களுக்கு வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தமிழீழ தேசமென்பது கட்டமைக்கப்பட்ட நிதி, பொருளாதார அரசியல் மயப்படுத்தப்பட்ட தேசமாக தமிழரின் நிலப்பகுதியில் இருந்தது. அந்தக் காலப்பகுதியில் அவர்களில் நிலப்பகுதிகளில் இயங்கிய தமிழீழ வைப்பகத்தில் தமிழர்கள் தங்களுடைய நகைகளை அடகு வைத்திருந்தனர். இறுதி யுத்தத்தின் போதும் அந்த வைப்பகங்களில் அடகு வைத்திருந்த நகைகளை எடுக்க முடிந்தவர்கள் மீள எடுத்தனர். எனினும் அவற்றை எடுக்காதவர்களின் பல கோடி ரூபாக்கள் பெறுமதியான நகைகளை கொள்கலன் பெட்டிகளில் கோதாபய ராஜபக்‌ஷவும் அரசாங்கமும் கொண்டுவந்ததாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவும் பல தடவைகள் கூறியுள்ளார். தானே அந்த நகைகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளேன் என்றும் அவற்றுக்கு என்ன நடந்தது என்றும் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதன்படி இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட இந்த நகைகள் தூயதாக்கலுக்காக மகிந்த குடும்பத்தினால் இப்போதும் உகண்டாவிலும் வேறு இடங்களிலும் பேணி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. விடுதலைப் புலிகளிடம் இருந்து சொத்துக்களை கே.பி எனப்படும் குமரன் பத்தமநாதன் ஊடாக பறிமுதல் செய்த கோதாபய ராஜபக்‌ஷ, மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினர் அந்த சொத்துக்களை பசில் ராஜபக்‌ஷ உள்ளிட்ட ராஜபக்‌ஷ குடும்பத்தின் பெயரில் பல நாடுகளில் முதலீடு செய்துள்ளதாக செய்திகளில் அறிகின்றோம்.

தமிழர்களால் அல்லது ஏழைகளால் தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட நகைகளுக்கு என்ன நடந்தது?இது தொடர்பில் நான் பல தடவைகள் கேள்வியெழுப்பிருந்தேன். அந்த நகைகளை நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களிடம் வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது வேறு கதையை கூறுகின்றனர். அவை அரசாங்கத்தின் நிதி மூலத்திற்கு மாற்றப்படும் என்று கூறுகின்றனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த அம்மா ஒருவர் என்னை சந்தித்த போது தான் 50 பவுண் நகைகளை தமிழீழ வைப்பகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்தேன் என்று கூறினார். இதுவரையில் 816 பேர் தமது தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட நகைகளை மீட்டுத்தாருங்கள் என்று என்னிடம் விண்ணப்பங்களை தந்துள்ளனர். அவற்றை இலங்கை அரசாங்கத்தின் படையினரே கொண்டு போனார்கள் என்று கூறப்பட்டுள்ளது என்றும் அவற்றை மீட்டுத்தாருங்கள் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் இந்த அரசாங்கமும் நாங்கள் அவற்றை மக்களிடம் வழங்குவோம் என்று கூறியுள்ளது. நீங்கள் கண்ணியமான அரசாங்கம் என்று கூறுகின்றீர்கள் அப்படியானால் அந்த நகைகளை ஏன் அந்த மக்களிடம் வழங்க முடியாது? சுரேஷ் சலே முதல் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷ வரையில் விசாரணை நடத்துகின்றீர்கள். அதேபோன்று இந்த நகைகளுக்கு என்ன நடந்தது என்று ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?இது தமிழர்களின் நகைகள் என்று விசாரணை நடத்தாமல் விடப் போகின்றீர்களா? உண்மையில் இந்த நகைகளுக்கு என்ன நடந்தது?

இதில் ஊழல் நடந்துள்ளது. இதனை விசாரிக்காமல் விட முடியாது. நடந்த மிகப்பெரிய அநியாயத்திற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நகைகளை வழங்க வேண்டும். நீங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியுள்ளீர்கள் அதனை மீறுகின்றீர்கள். அவற்றை மக்களிடம் வழங்க வேண்டும். நீங்கள் மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக பட்டியலை கோரி அது தொடர்பில் நடவடிக்கை எடுங்கள். எத்தனை ஆயிரம் பேர் நகைகளை அடகு வைத்துள்ளனர். அப்படியென்றால் எவ்வளவு கோடி ரூபா நகைகளை ராஜபக்‌ஷ அரசாங்கம் கொள்ளையடித்துள்ளது என்பதனை வெளிக்கொண்டு வாருங்கள்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் கொண்டுவரப்பட்ட நிதிகளும் அரசாங்கத்தினால் முடக்கப்பட்டுள்ளன. அந்த நிதியை மக்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரச வங்கிகளில் சட்டரீதியாக வைக்கப்பட்ட பணத்தை அரசாங்கங்கள் பகல் கொள்ளையடித்துள்ளது. அவற்றை மீண்டும் மக்களிடம் வழங்க உரிய நடவடிக்கையை இந்த அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றார்.