.jpg)
அரசாங்கம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்து நாட்டின் ஜனநாயகத்தையும், நீதித்துறைச் சுதந்திரத்தையும் முற்றாகச் சீரழித்து வருகிறது. முறைமை மாற்றத்தைக் கொண்டுவருவதாகவும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் கூறி அதிகாரத்திற்கு வந்த தற்போதைய அரசு, ஜனநாயகத்தை பலப்படுத்தும் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறைக்கிடையிலான பரஸ்பர சமநிலையைச் சீர்குலைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
டி. எஸ். சேனாநாயக்க அரசியல் அறிவியல் பீடத்தின் டிப்ளோமா பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
முறைமை மாற்றத்தைக் கொண்டுவருவதாகவும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் கூறி அதிகாரத்திற்கு வந்த தற்போதைய அரசு, ஜனநாயகத்தை பலப்படுத்தும் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறைக்கிடையிலான பரஸ்பர சமநிலையைச் சீர்குலைத்துள்ளது. 22ஆவது திருத்தத்தின் மூலம் நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதித்து, நீதி வழங்கும் செயன்முறையையும் சட்டத்தின் ஆட்சியையும் இந்த அரசு சீரழித்து வருகிறது.
முந்தைய அரசாங்கம் உள்நாட்டுப் கடன் மறுசீரமைப்பின் போது பெருங்கோடீஸ்வரர்களைத் தொடாமல் ஊழியர் சேமலாப நிதியத்தைப் பாதித்தது. அதேபோல் தற்போதைய அரசும் தமக்கு வாக்களித்த விவசாயிகளைப் புறக்கணித்து, ஒவ்வொரு நெல் கிலோவிற்கும் 17 ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. குடும்ப ஆட்சியைத் தோற்கடித்து நீதியைக் கொண்டுவருவதாகக் கூறி அதிகாரத்திற்கு வந்த இந்த அரசு, ஜனநாயக வரலாற்றிலேயே மிகவும் தோல்வியடைந்த அரசாங்கமாக மாறியுள்ளதுடன் லம்பன் முதலாளித்துவத்தை பலப்படுத்தி வருகிறது.
இலங்கையை ஒரு மாதிரித் திட்டமாகக் கொண்டே லீ குவான் இயூ சிங்கப்பூரை அபிவிருத்தி செய்தார். ஆனால் இன்று சிங்கப்பூர் போன்ற நாடுகள் நம்மை விட வெகுதூரம் முன்னோக்கிச் சென்றுவிட்டன. சோசலிசக் கொள்கைகளின் மூலம் ஒருபோதும் செல்வத்தை உருவாக்க முடியாது என்பதை உலகம் உணர்ந்துள்ளது. சீனா கூட இன்று முதலாளித்துவக் கொள்கைகளையே பின்பற்றுகிறது.
எனினும், கட்டுப்பாடற்ற முதலாளித்துவம் சமூகத்தில் ஏழை, பணக்கார இடைவெளியை அதிகரிக்கும் என்பதால், இலங்கைக்கு மனிதநேய முதலாளித்துவமும் சமூக சந்தைப் பொருளாதாரமும் அவசியமாகிறது. செல்வத்தை உருவாக்குவதுடன் அதனைச் சமூகத்தில் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கும் மாதிரியையே சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் கூட ஏற்றுக் கொள்கின்றன.
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே. ஆர். ஜெயவர்த்தன மற்றும் ஆர். பிரேமதாச ஆகியோர் வலதுசாரி மற்றும் இடதுசாரிக் கொள்கைகளின் சாராம்சங்களை ஒன்றிணைத்த மத்திய பாதையையே பின்பற்றினர். கிராம எழுச்சி மற்றும் மகாவலி போன்ற திட்டங்கள் இடதுசாரிக் சிந்தனைகளின் வெளிப்பாடாகும். நாட்டின் முன்னேற்றத்திற்கு இத்தகைய ஒருங்கிணைந்த கொள்கைப் பாதையே அவசியமாகும்.
அத்துடன், 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 3ஆம் அத்தியாயத்தில் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தக்கூடிய சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் 6ஆம் அத்தியாயத்தில் உள்ள பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது. எனவே, புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் போது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுடன் பொருளாதார, சமூக, கல்வி மற்றும் சுகாதார உரிமைகளும் அடிப்படை உரிமைகளாக அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றார்.



.jpg)
.jpg)





.jpg)

.jpg)