கடந்த ஜூலை 24ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகார சபையின் கேகாலை மாவட்ட விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
400 ரூபாய் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த முழுமையான இரத்த அணுக்கள் பரிசோதனைக்கு 500 ரூபாய் அறவிடப்பட்டிருந்தமை விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
மேலும், வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் காலாவதியான HCV Rapid Test Cassettes 20 பொதிகள் மற்றும் பரிசோதனை உபகரணங்களுடன் பயன்படுத்தப்படும் காலாவதியான இரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வைத்தியசாலை மருந்தகத்தில் விற்பனைக்காக காலாவதியான ஒருமுறை பயன்படுத்தும் ஊசிகள் 23 பொதிகள் வைக்கப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 6ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த மூன்று குற்றச்சாட்டுகளையும் வைத்தியசாலை தரப்பு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் மொத்தமாக 520,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
காலாவதியான மருந்துகள், மருத்துவ இரசாயனங்கள் அல்லது மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தும் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்கள் தொடர்பிலும், கட்டுப்பாட்டு விலையை விட அதிக கட்டணம் அறவிடப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.






.jpg)

.jpg)





