சிறைச்சாலைகளில் இடம்பெறும் மோதல்களுக்கும், ராஜபக்ஷர்களுக்கும் இடையில் தொடர்புண்டு என்று அரசாங்கம் குறிப்பிடலாம் – நாமல் ராஜபக்ஷ



சிறைச்சாலைகளில் இடம்பெறும் மோதல்களுக்கும், ராஜபக்ஷர்களுக்கும் இடையில் தொடர்புண்டு என்று அரசாங்கம் குறிப்பிடலாம். தமது இயலாமை மற்றும் பலவீனத்தை பிறிதொரு தரப்பின் மீது சுமத்துவதில் அரசாங்கம் தேர்ச்சிப் பெற்றுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்தனகல பகுதியில் நேற்று சனிக்கிழமை (08) மாலை இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ராஜபக்ஷர்கள் ஒருபோதும் வன்முறையை கட்டவிழ்த்து விடவில்லை. அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக வன்முறையை கையில் எடுக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பூகோள ரீதியிலான தாக்கங்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தின.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மக்கள் எமது அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தினார்கள். நாங்களும் பதவி விலகினோம். நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வன்முறையை கையில் எடுக்கவில்லை. ஜனநாயக போராட்டங்களுக்கு மதிப்பளித்து அவர் பதவி விலகினார். அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் மீதும்,போராட்டக்காரர்கள் மீதும் அரச தாக்குதலை பிரயோகிக்கவில்லை.

இந்த அரசாங்கம் ஜனநாயகம் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களையும், எதிர்ப்புக்களையும் சூட்சமமான முறையில் முடக்குகிறது.அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

சிறைச்சாலைக் கட்டமைப்பில் காணப்படும் பலவீனம் மற்றும் நிர்வாகத்தின் தோல்வி தற்போதைய மோதல்களாக வெளிப்படுகின்றன. சிறைச்சாலைகளில் இடம்பெறும் மோதல்களுக்கும், நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்புண்டு என்று அரசாங்கம் குறிப்பிடலாம். தமது இயலாமை மற்றும் பலவீனத்தை பிறிதொரு தரப்பின் மீது சுமத்துவதில் அரசாங்கம் தேர்ச்சிப் பெற்றுள்ளது.

சிறைச்சாலை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கும், உயிரிழப்புக்களுக்கும் அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறிப்பிட்டார். ஆகவே தற்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.