நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுங்கட்சி தோற்கடித்த போதிலும், அடுத்தடுத்து நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளிலும் மோதல்களும் அசம்பாவிதங்களும் தொடர்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
சசுனட அருண திட்டத்தின் கீழ், சித்தம்கல்லென ரஜமஹா விகாரையின் தர்மசாலை மற்றும் அறநெறிப் பாடசாலைக் கட்டிடத்துக்கு 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கூரைத் தகடுகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் நிர்வாகத் திறனின்மைக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்த அமைப்பில் காணப்படும் அப்பட்டமான குறைபாடுகள் மற்றும் அநீதிகளைச் சுட்டிக்காட்டி கொண்டுவரப்பட்ட அந்தப் பிரேரணைக்கு ஆதரவாக எமது தரப்பில் 36 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டன.
ஆனால், அரசாங்கத் தரப்பில் உள்ள 152 உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்து அமைச்சரைப் பாதுகாத்தனர். பிரேரணையைத் தோற்கடித்துவிட்டோம் என்ற பெருமிதத்தில் ஆளுங்கட்சியினர் அன்றைய தினம் பெருமகிழ்ச்சி அடைந்தனர். நாங்களும் ஜனநாயக ரீதியாக எங்களது தோல்வியை அமைதியாக ஏற்றுக்கொண்டோம்.
ஆனால், அதன் பின்னர் என்ன நடந்தது? நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவத்தைத் தொடர்ந்து மஹர சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை, குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பள்ளன்சேனை சிறைச்சாலை என நாட்டின் பல சிறைச்சாலைகளிலும் அடுத்தடுத்துப் பாரிய அசம்பாவிதங்களும் மோதல்களும் வெடித்தன.
நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்த போதிலும் சிறைச்சாலைகளின் மோதல்களும் அசம்பாவிதங்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
அன்று அமைச்சரைக் காப்பாற்றுவதற்காக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்து, சிறைச்சாலை அமைப்பின் சீரழிவை மறைத்துப் பாதுகாத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அமைப்பின் தோல்வியை மறைக்க முற்பட்ட இந்த மக்கள் பிரதிநிதிகள் எந்த முகத்துடன் இனி பொதுமக்களுக்கு முன் செல்லப்போகிறார்கள்? அவர்களுக்குச் சிறிதேனும் வெட்கம் இல்லையா?
நாங்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எந்தவொரு தனிப்பட்ட துவேசத்தின் காரணமாகவும் கொண்டுவரவில்லை. சிறைச்சாலை அமைப்பினுள் காலம் காலமாக புரையோடிப் போய் இருக்கும் தீவிரமான நெருக்கடிகள் காரணமாகவே கொண்டுவந்தோம்.
உண்மையில் 10,000 அல்லது 11,000 கைதிகளை மட்டுமே வைக்கக்கூடிய கொள்ளளவு கொண்ட எமது நாட்டின் சிறைச்சாலைகளில் இன்று 35,000 முதல் 40,000 பேர் வரை அடைக்கப்பட்டுள்ளனர். இது இன்று நேற்று உருவான பிரச்சினையல்ல் நீண்டகாலமாக இருக்கும் பிரச்சினை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் நாட்டின் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றி, பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களைப் பெற்று, உள்ளூராட்சி மன்றங்களிலும் பெரும்பான்மையைப் பெற்றது பழைய முறையை மாற்றுவோம், அமைப்பைச் சீர்திருத்துவோம் என்ற வாக்குறுதியை அளித்தே ஆகும். ஆனால், ஆட்சிக்கு வந்து இவ்வளவு காலம் ஆகியும் அந்தப் பழைய முறையில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.



.jpg)


.jpg)



.jpg)



