
தனியார் வைத்தியசாலைகளுக்கு உடனடியாக கடுமையான தரநிலைகளை அமுல்படுத்தினால், பல வைத்தியசாலைகள் தமது சேவைகளைத் தொடர்வதில் சிரமங்களை எதிர்கொள்வதுடன், சில வைத்தியசாலைகள் மூடப்படும் நிலையும் ஏற்படக்கூடும் என பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (30) கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்குகையில்,
தனியார் சுகாதாரத் துறைக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் படிப்படியாக வலுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, அடுத்த சில மாதங்களில் பல்வேறு புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தனியார் சுகாதார சேவைகளை கண்காணிப்பதற்கென தனியான பிரிவு, பணிப்பாளர், அலுவலகம் மற்றும் ஊழியர்கள் உள்ளதாகவும், வெளிப்பார்வையில் அவை முறையாக கண்காணிக்கப்படவில்லை எனத் தோன்றக்கூடும்.
எனினும் தனியார் சுகாதாரத் துறையை ஒழுங்குபடுத்துவதில் நுகர்வோர் விவகார அதிகார சபையும் சுகாதார அமைச்சும் ஈடுபட்டுள்ளதாகவும், விலைகள் மற்றும் காலாவதியான பரிசோதனைப் பொருட்கள் உள்ளிட்ட சில விடயங்களை நுகர்வோர் விவகார அதிகார சபை கண்காணிக்க முடியும்.
தனியார் சுகாதாரத் துறையில் சில பகுதிகளில் தரநிலைகள் தொடர்பான குறைபாடுகள் காணப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம், அவற்றை உடனடியாக கடுமையாக அமுல்படுத்தினால் பல வைத்தியசாலைகள் பாதிக்கப்படும்.
மேலும், பல தனியார் வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்களை அவர்களது பணி நேரத்துக்குப் பின்னர் மணித்தியால அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர்.
தனியார் வைத்தியசாலைகள் தமக்குள்ள நிரந்தர வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களின் எண்ணிக்கையை கட்டாயமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற சட்டம் உடனடியாக கொண்டுவரப்பட்டால், பல வைத்தியசாலைகள் மூடப்படக்கூடும்.
எனினும், நாட்டில் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் எதிர்காலத்தில் இத்தகைய தேவைகள் கட்டாயமாக்கப்படும், அப்போது தனியார் வைத்தியசாலைகள் அரச துறையில் வழங்கப்படும் சம்பளத்துக்கு நெருக்கமான சம்பளத்தை வழங்கி வைத்தியர்களை பணியமர்த்த வேண்டியிருக்கும்.
இதேவேளை, தனியார் சுகாதாரக் காப்புறுதித் துறையும் போதியளவில் வளர்ச்சியடையவில்லை. பெரும்பாலான காப்புறுதித் திட்டங்களில் சிகிச்சைக்கான காப்புறுதி வரம்புகள் காணப்படுவதால், தனியார் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சில சந்தர்ப்பங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பின்னர் காப்புறுதி நிறுவனங்கள் கட்டணத்தை செலுத்துவதை நிறுத்துகின்றன.
இதனால் நோயாளிகள் மீண்டும் அரச வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படும் நிலை ஏற்படுகின்றது. தனியார் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக இலக்குகளுடன் கூடிய விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒழுங்குமுறை, காப்புறுதி மற்றும் மனித வள முகாமைத்துவம் ஆகியவை ஒருங்கிணைந்த வகையில் மேம்படுத்தப்பட வேண்டும்.
இந்த மாற்றங்களை ஒரே நேரத்தில் இரண்டு வருடங்களுக்குள் நடைமுறைப்படுத்த முடியாது, படிப்படியாக அவற்றை அமுல்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றார்.



.jpg)
.jpg)






.jpg)
.jpg)