ரூ.100 குடிநீர் போத்தலை ரூ.130க்கு விற்ற உணவகத்திற்கு ரூ.7 இலட்சம் அபராதம்

நுகர்வோர் விவகார அதிகார சபையால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைவிட அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்த வாழைச்சேனை உணவகமொன்றுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள், கடந்த ஜூன் மாதம் 4ஆம் திகதி மேற்கொண்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து அமிர்தம் உணவகத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனர்.

சோதனையின்போது, அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபா எனக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு லீற்றர் குடிநீர் போத்தல் 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கு வியாழக்கிழமை (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றஞ்சாட்டப்பட்ட உணவக நிர்வாகம் குற்றத்தை ஒப்புக்கொண்டது.

இதனையடுத்து, வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் குறித்த உணவகத்திற்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தது.