உலோகக் கதவுகளுக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட 2 இலட்சத்திற்கும் அதிகமான சீன சிகரெட்டுகள் சுங்கத்தால் பறிமுதல்




சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோகக் கதவுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட 2 இலட்சத்துக்கும் அதிகமான சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றிவந்த கொள்கலன் ஒன்றைச் சுங்க வருமான கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டபோது இவை கண்டுபிடிக்கப்பட்டன.

சுங்கச் சோதனையிலிருந்து தப்புவதற்காகச் சிகரெட்டுகள் கதவுகளுக்குள் மிகவும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் சந்தைப் பெறுமதி 3 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சுங்க வருமான கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.