
இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், 2027ஆம் ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்குத் தொகுதி அடிப்படையிலான கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைச் சுமை கணிசமாகக் குறையும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாடசாலைப் புத்தகப்பைகளின் எடையைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் செயற்பாடு சார்ந்த கற்றல் முறையினால், மாணவர்கள் வீட்டுக்கும் பாடசாலைக்கும் எடுத்துச் செல்லவேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை குறைவடையும் என அவர் தெரிவித்தார்.
வகுப்பறைச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும். இதனால் மாணவர்கள் அவற்றைத் தினமும் வீட்டுக்கும் பாடசாலைக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
கற்றல் செயற்பாடுகளை நிறைவுசெய்த பின்னர், தவணையின் இறுதியிலேயே அந்தப் புத்தகங்களை மாணவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.
மேலும், பெரிய பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக ஒவ்வொரு பாடத்திற்கும் அந்தந்தத் தவணைக்குத் தேவையான தொகுதிகள் மாத்திரம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த மாற்றங்கள் மாணவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பைகளின் எடையைப் பெருமளவில் குறைக்கும் என பிரதமர் தெரிவித்தார்.





.jpg)



.webp)

.jpg)
