காலாவதியான பேக்கரி உணவுகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு 2 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிப்பு!

நுகர்வோரை ஏமாற்றி காலாவதியான பேக்கரி தயாரிப்புகளை விற்பனை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பேக்கரி உற்பத்தி நிறுவனமொன்றிற்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் 2,00,000 ரூபா தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, 2026/04/16 எனும் காலாவதி திகதியிடப்பட்ட 'ஸ்ட்ராபெரி' சுவையூட்டப்பட்ட க்ரீம் பன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதை தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை (09) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றம்சாட்டப்பட்ட நிறுவனம் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து நீதிமன்றம் தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்யும்போது தயாரிப்பு மற்றும் காலாவதி திகதிகளைச் சரிபார்ப்பது நுகர்வோரின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள், இவ்வாறான சட்டவிரோத விற்பனைகள் தொடர்பில் தகவல்கள் இருப்பின் அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.