காலாவதியான தேயிலை விற்பனை: நிறுவனத்திற்கு 2 இலட்சம் ரூபா அபராதம்


காலாவதியான தேயிலைப் பொதியொன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்த நிறுவனமொன்றுக்கு கொழும்பு 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றம் 200,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டது.

2026ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதியுடன் காலாவதியானதாகக் குறிப்பிடப்பட்டிருந்த 400 கிராம் தேயிலைப் பொதி, 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட 1875/38 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 52ஆம் இலக்க பணிப்புரையை மீறிய குற்றச்சாட்டில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விற்பனைக்குப் பொருத்தமற்றவை, காலாவதியானவை அல்லது மனித நுகர்வுக்கு உகந்ததல்ல என அடையாளம் காணப்பட்ட பொருட்களை, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுடன் சேமித்து வைப்பதையோ காட்சிப்படுத்துவதையோ குறித்த பணிப்புரை தடை செய்கிறது.