
நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கொழும்பிலுள்ள மூன்று தனியார் நிறுவனங்களுக்கு மொத்தமாக 3 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) மேற்கொண்ட சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் இறக்குமதியாளர் தொடர்பான விபரங்கள், அதிகபட்ச சில்லறை விலை (MRP) உள்ளிட்ட கட்டாய தகவல்கள் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பு 03 பகுதிகளில் இயங்கும் வர்த்தக நிலையங்கள் தொடர்பிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களிலும் விலைகள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொடர்பு விபரங்கள் உள்ளிட்ட கட்டாய தகவல்கள் இடம்பெற வேண்டும் என்றும் அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.










.jpg)
.jpeg)
.jpg)