கட்டுநாயக்க விமான நிலையத்தில் கஞ்சாவுடன் 3 பெண்கள் கைது


கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'கஞ்சா' போதைப்பொருளை கொண்டு வந்த, மூன்று இலங்கை பெண் பயணிகள் நேற்று புதன்கிழமை (09) இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு-13, புத்தளம் - கற்பிட்டி மற்றும் கொழும்பு-02 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34,37 மற்றும் 54 வயதுடைய பெண்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் நேற்று இரவு 10:50 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து 'தாய் ஏயர் ஏசியா' சேவையின் FD-140 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் கொண்டு வந்த பயணப் பைகளுக்குள் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 803 கிராம் எடையுடைய 'கஞ்சா' போதைப்பொருள் 11 உருண்டைகளாக பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

மேலும், மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.