80 மில்லியன் அமெரிக்க டொலர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பு : இலங்கை வர்த்தகர் கைது


பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர் — இலங்கை மதிப்பில் சுமார் 2,300 கோடி ரூபாவை வெளிநாட்டுக் கணக்குகளுக்குப் பரிமாற்றியதாகக் கூறப்படும் மருதானையைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2023 முதல் 2025 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை மருதானையில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டணம் என்ற பெயரில், தந்திப் பணப் பரிமாற்ற முறைமை (Telegraphic Transfer – T/T) ஊடாக வெளிநாடுகளுக்கு இந்தப் பணம் அனுப்பப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.