“இரண்டு ஆண்டுகளுக்குள் மக்களால் வெறுக்கப்பட்ட அரசாங்கமாக மாறிவிட்டது” – சாகர காரியவசம்



தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் முன்னரே, இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மக்களால் வெறுக்கப்பட்ட, பலவீனமான மற்றும் அதிருப்திக்குள்ளான ஒரு அரசாங்கமாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (14) பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அநுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியில் கலந்துகொண்ட மகா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்த மக்களுக்குத் தனது கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இலங்கை வரலாற்றில் பலமிக்க மற்றும் பலவீனமான பல்வேறு அரசாங்கங்கள் ஆட்சிப் பீடமேறியுள்ள போதிலும், ஒரு அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கோ அல்லது மக்கள் மத்தியில் அதிருப்தியடைவதற்கோ குறிப்பிட்ட காலம் தேவைப்படும் எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் ஆட்சிக்கு வந்து வெறும் இரண்டு வருடங்களுக்குள் இவ்வளவு தூரம் பலவீனமடைந்து, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஓர் அரசாங்கம் உருவானது நாட்டின் நவீன வரலாற்றில் இதுவே முதல்முறையாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

பொதுஜன பெரமுன அநுராதபுர பேரணியை ஏற்பாடு செய்தத அறிந்த நாளிலிருந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த சாகர காரியவசம், தேர்தல் இல்லாத ஒரு காலத்தில் முன்னாள் தலைவர்கள் மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்குவதற்காகவே இவ்வாறான நிகழ்வுகளை நடத்தியதாக நினைவூட்டினார்.

எனினும், தற்போதைய ஜனாதிபதி எவ்வித அபிவிருத்தித் திட்டங்களும் இன்றி, தேர்தலுக்கு முன்னர் வழங்கியது போல் மீண்டும் பொய் வாக்குறுதிகளை வழங்கி, கூட்டங்களை நடத்தி நாட்டின் நிதியையும் நேரத்தையும் விரயம் செய்து வருவதாகவும், இதற்குப் பொறுப்பானவர்கள் அடுத்த அரசாங்கத்தில் இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்தார்.

மேலும், பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரைகளில் நாட்டின் அபிவிருத்தி குறித்துப் பேசாமல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் அதன் தலைவர்களையுமே தொடர்ச்சியாக விமர்சித்து வருவதன் மூலம் அவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது தெளிவாவதாகக் குறிப்பிட்ட அவர், மக்களுக்கு எவ்விதப் பயனும் தராத இவ்வாறான கூட்டங்களில் கலந்துகொண்டு பொதுமக்கள் தமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு, வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை, பிள்ளைகளின் கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைக் செலவு காரணமாக பொதுமக்கள் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்குப் பதிலாக அரசாங்கம் அதனை மேலும் மோசமான நிலைக்கு இழுத்துச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனவே, ஜனாதிபதிக்குத் தன் மீது உண்மையில் நம்பிக்கை இருக்குமானால், மக்கள் பணத்தை வீணடித்துப் பொய் வாக்குறுதிகளை வழங்குவதை உடனடியாக நிறுத்திவிட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், இனிமேலாவது நாட்டின் உண்மையான அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.