புவிசார் அரசியல் வரைபடவியலாளர் அமைப்பின் விசேட நிகழ்வு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.
இதன் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தனது உரையின் ஆரம்பத்தில் வரலாற்றுப் பின்னணியைக் குறிப்பிட்ட அவர், பண்டைய காலத்தில் நளந்தா பல்கலைக்கழகம் முதல் இலங்கையின் மகாவிகாரை மற்றும் அபயகிரி வரை நிலவிய அறிவு, மதம் மற்றும் அமைதிசார் தூதரக உறவுகள் இந்தியப் பெருங்கடலின் மென்சக்தியாக விளங்கியதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்தியப் பெருங்கடலின் புவிசார் அரசியல் சூழல் தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால், எந்தவொரு தனிப்பட்ட உலகப் பேரரசாலும் அல்லது கடற்படையாலும் முழுமையான ஆதிக்கத்தை இங்கு நிலைநாட்ட முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய சர்வதேச மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், இந்தோ-பசிபிக் என்ற கருத்துருவத்திலிருந்து விலகி, இந்தியப் பெருங்கடல் தனது சொந்த வலிமையுடன் தனித்து நிற்கும் காலம் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, மேற்கு ஆசியாவில் உள்ள ஹோர்மூஸ் நீரிணை, ஈரானின் மெக்ரான் கடற்கரை பகுதிகள் மற்றும் யேமனில் ஹவுதி அமைப்பினரின் கட்டுப்பாடுகள் என்பன உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகப் பாதைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் மூலம் மேற்கு இந்தியப் பெருங்கடலில் புதிய அதிகாரச் சமநிலை உருவாகி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, மியான்மர் வழியிலான வங்காள விரிகுடா பிரவேசம் ஆகியவை அவர்களின் இரட்டைப் பெருங்கடல் மூலோபாயத்தை (Twin Ocean Strategy) வலுப்படுத்தி வருவதாகவும், மறுபுறம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கடற்படைப் பலம் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு சிக்கலான புவிசார் அரசியல் சூழலில், பிராந்திய அமைதியைப் பேண கொழும்பு பாதுகாப்பு கூட்டமைப்பு (Colombo Security Conclave) இலங்கைக்கு மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டார். இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, மொரீஷியஸ், பங்களாதேஷ் மற்றும் சிஷெல்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இக்கூட்டமைப்பு, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் மனிதநேய உதவிகள் ஆகிய ஐந்து முக்கிய தூண்களின் கீழ் இயங்குகிறது.
இக்கூட்டமைப்பின் தலைமையகமாக இலங்கையை அமைப்பதற்கான அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், எதிர்வரும் ஆண்டில் இதன் தலைமையகச் செயல்பாடுகள் முறைப்படி ஆரம்பிக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
நவீன காலத்தில் பெரிய போர்க்கப்பல்களை விடவும் சிறிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளே கடல்சார் போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், கொழும்பு பாதுகாப்பு கூட்டமைப்பை வலுப்படுத்துவது பிராந்தியப் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது எனத் தெரிவித்து ரணில் விக்கிரமசிங்க தனது உரையை நிறைவு செய்தார்.


.jpg)


.jpg)





.jpg)

