பொலிஸ் உளவாளி ஒருவரை கொலை செய்ய திட்டம்: பாதாள கும்பலின் போலி பொலிஸ் ஜீப் வண்டி கைப்பற்றல்



பொலிஸ் உளவாளி ஒருவரைக் கொலை செய்வதற்காகச் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலினால் பயன்படுத்தப்பட்ட போலியான பொலிஸ் ஜீப் வண்டியொன்றை வலான மத்திய ஊழல் தடுப்புப் படையினர் நேற்று (08) செவ்வாய்க்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

கடுவலை, ஹேவாகம பகுதியில் அமைந்துள்ள பழுதுபார்க்கும் நிலையமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சொகுசு ஜீப் வண்டி கண்டெடுக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காகக் கிரிந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 நவம்பர் 29 ஆம் திகதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வழிகாட்டலில், கிரிந்த கரையோரப் பகுதியில் 500 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புடைய 325 கிலோ 'ஐஸ்' போதைப்பொருள், 8 சந்தேகநபர்கள் மற்றும் 6 வாகனங்களுடன் கைப்பற்றப்பட்டது.

இந்த சோதனைகளுக்கான தகவலை இந்த பொலிஸ் உளவாளியே வழங்கியிருந்தார்.

வெளிநாட்டிலிருக்கும் 'ரூபன்' மற்றும் 'அங்கொட பிரியங்கர' ஆகிய பாதாள உலகக் கும்பல் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பிற்குப் பழிவாங்கும் வகையில், பொலிஸ் உளவாளியை கடத்திக் கொலை செய்து, அவரது தலையை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டின் முன் வீசி எறிய அவர்கள் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த திட்டம் முறியடிக்கப்பட்ட நிலையில், 09 மாதங்களின் பின்னர் (செப்டம்பர் 05 காலை 6:00 மணியளவில்) கிரிந்த துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பொலிஸ் உளவாளியை , போலி பொலிஸ் ஜீப் வண்டியினால் மோதிக் கொலை செய்ய அக் கும்பல் முயன்றுள்ளது.

இந்த தாக்குதலிருந்து தப்பிக்க முயன்ற போது காயமடைந்த பொலிஸ் உளவாளி, தற்போது பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொலை முயற்சியை மேற்கொண்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளைக் கைது செய்வதற்காகக் கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.