ஞானசார தேரர் தலைமறைவு- மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை!



பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலேகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை அடுத்து, அவர் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகால சிறைத்தண்டனையில் எஞ்சிய பகுதியைக் கழிப்பதற்காக அவரை மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு மே மாதம் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது, பொது நம்பிக்கையை மீறியது மற்றும் இயற்கை நீதிக்கோட்பாடுகளுக்கு முரணானது எனத் தெரிவித்து, மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அதனைச் செல்லுபடியற்றது என அறிவித்துத் தீர்ப்பளித்தது.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, இராஜகிரிய - நாவலப் பகுதியில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரைக்குச் சென்ற சிறைச்சாலை அதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்ய முற்பட்டனர்.

எனினும், ஞானசார தேரர் இருக்கும் இடம் குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது என விகாரையிலிருந்த ஏனைய தேரர்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், சுமார் 9 மாதங்கள் மட்டுமே சிறைத்தண்டனையை அனுபவித்திருந்த நிலையில் ஜனாதிபதி பொதுமன்னிப்புப் பெற்றிருந்தார். நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக அவர் தனது தண்டனையின் எஞ்சிய பெரும்பகுதியைச் சிறையில் கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.