டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது
தலவாக்கலை, டெவோன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி எலும்புகள் மற்றும் கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த இறைச்சிக் கடை ஊழியர்கள் இருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர். கழிவுகளை ஏற்றிச்சென்ற ஆட்டோவும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின்கீழுள்ள பொது சுகாதார பரிசோதகர்களால் இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும்இ ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேக நபர்கள் இருவருக்கும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணை வழங்கி நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஹட்டன் – கொட்டகலை நகரில் மாட்டிறைச்சி கடை நடத்தும் உரிமையாளர் கழிவுகளை அகற்றுவதற்குச் சரியான முறைமை ஒன்றைக் கையாளாமல் நாளாந்தம் சேரும் மாட்டிறைச்சி எலும்புகள் மற்றும் ஏனைய கழிவுகளைத் தனது கடையில் பணிபுரியும் இரு ஊழியர்கள் மூலம் ஆட்டோவில் ஏற்றிச் சென்று டெவோன் ஓடையில் கொட்டி வந்துள்ளார்.
இது குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டகலை கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி கே. சுதர்சனின் ஆலோசனையின் பேரில் சுகாதார பணிமனையின் ஏனைய பொது சுகாதார பரிசோதகர்களுடன் சென்று சந்தேகநபர்கள் இருவரும் கழிவுகளை ஓடையில் கொட்டிய போதே கையும் மெய்யுமாகப் பிடித்ததாகக் கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர் தேவன் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் கொட்டகலை ரொசிட்டா பகுதியில் உள்ள 60 அடி ரயில்வே இரும்புப் பாலத்திற்கு அருகில் இக்கழிவுகளைக் கொட்டி வந்துள்ளனர்.
இந்தக் கழிவுகள் கொட்டப்படும் ஓடைப் பகுதிக்கு மிக அருகில் கிறிஸ்டஸ் பார்ம் உள்ளிட்ட பல தோட்டங்களுக்கான பாதைகள் அமைந்துள்ளன. இந்த சட்டவிரோத நடவடிக்கையால் அப்பாதையைப் தினசரி பயன்படுத்தும் பெருமளவிலான தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்ததாக பொது சுகாதார பரிசோதகர் மேலும் குறிப்பிட்டார்.
கொட்டகலை நகரில் கோழி இறைச்சி கடைகளின் கழிவுகளும் இதேபோன்று எடுத்துவரப்பட்டு டெவோன் ஓடையில் கொட்டப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.




.jpg)

.jpg)






.jpg)