மட்டக்களப்பு - களுதாவளையில் அனோஜனை மன்னித்து விடுதலை செய்யக் கோரி அமைதி வழிப் போராட்டம் !


சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை மன்னித்து விடுதலை செய்யுமாறு களுதாவளை மக்கள் கண்ணீருடன் அமைதிவழி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) களுதாவளை பிரதான வீதியில் அமைதிவழி கவன ஈர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அவரது விடுதலையை வலியுறுத்தி பொதுமக்கள் அமைதியான முறையில் கவன ஈர்ப்பில் ஈடுபட்டனர்.

“அனோஜன் எங்களது பிள்ளையைப் போன்றவர். தெரியாமல் சமூக வலைத்தளத்தில் தவறிழைத்துவிட்டார். அவரது குடும்பத்தினர் மாத்திரமன்றி நாங்களும் மிகுந்த கவலையில் உள்ளோம். எனவே, அவரை மன்னித்து விடுதலை செய்யுமாறு சவூதி மன்னரிடம் மிகவும் பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என கவன ஈர்ப்பில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்தக் கவன ஈர்ப்பு நடவடிக்கையில் களுதாவளையிலுள்ள ஆலயங்களின் பிரதிநிதிகள், சங்கங்கள் மற்றும் மன்றங்களின் உறுப்பினர்கள், களுதாவளை பிரதேச சபை உறுப்பினர்கள், ஏனைய பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.