லீசிங் நிறுவனங்கள் உங்கள் வாகனத்தை பலவந்தமாக கைப்பற்ற முடியுமா? – சட்ட நடைமுறையை தெளிவுபடுத்திய பொலிஸார்


லீசிங் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை மீளக் கைப்பற்றும் நடவடிக்கையில் பொலிஸ் அதிகாரிகள் நேரடியாக ஈடுபடுவதில்லை என இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைச் சட்டத்தின் கீழ், வாகனத்தை மீட்கும்போது வாடிக்கையாளர் எதிர்ப்பு தெரிவிக்காத சந்தர்ப்பத்தில் மாத்திரமே லீசிங் நிறுவனம் அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அதனைக் கைப்பற்ற முடியும்.

வாடிக்கையாளர் எதிர்ப்பு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னறிவிப்புடன் பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டால், பொது அமைதியைப் பேணுவதற்காக மட்டுமே பொலிஸார் தலையிட முடியும். வாகனத்தைக் கைப்பற்றுவதில் பொலிஸார் பங்கேற்க முடியாது.

சட்ட நடைமுறைகளை மீறி வாகனம் கைப்பற்றப்பட்டால் பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியும் என்றும், கொள்ளை, திருட்டு அல்லது குற்றவியல் அத்துமீறல் போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.