காகிதப் பயன்பாட்டைக் குறைத்து அரச சேவைகளை டிஜிட்டல்மயமாக்க நடவடிக்கை - பிரதமர் ஹரிணி அமரசூரிய

பாராளுமன்றம், அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் காகித பயன்பாட்டைக் குறைத்து டிஜிட்டல்மயமாக்குவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. இதற்குச் சிறிது காலம் எடுக்கும். காகித பயன்பாட்டைக் குறைத்தால் பணிச்சுமை குறைவடையும். வினைத்திறனான முறையில் சேவை வழங்கலை முன்னெடுக்கலாம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பாராளுமன்ற சபையில் பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் ஹன்சாட் அறிக்கைகள், நிகழ்ச்சி நிரல் புத்தகங்கள், நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் ஏனைய பாராளுமன்ற அச்சுப் பணிகளுக்காக 2023ஆம் ஆண்டு 45.3 மில்லியன் ரூபாவும், 2024ஆம் ஆண்டு 58.7 மில்லியன் ரூபாவும், 2025ஆம் ஆண்டு 73.1 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது. இந்த அனைத்து அச்சிடல்களும் பாராளுமன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே செய்யப்பட்டுள்ளன. அதேபோல், காகித பயன்பாட்டைக் குறைப்பதற்காக வேலைத்திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்படுகிறது.

திறைசேரியின் செயலாளரால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைக் கடிதத்திற்கு அமைவாக, எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கைகளை டிஜிட்டல் முறையில் மட்டுமே சமர்ப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவில் ஆராயப்பட்டது.

இதன்போது, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரினதும் விருப்பத்தை அறிந்துகொள்வதற்காகக் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அந்த முடிவுகளின்படி, எதிர்காலத்தில் டிஜிட்டல் முறையில் இவ்வாறான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கும் உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் முறையிலும், அச்சிடப்பட்ட பிரதிகளைப் பெற விருப்பம் தெரிவிக்கும் உறுப்பினர்களுக்கு அச்சிடப்பட்ட பிரதிகளாகவும் உரிய ஆவணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், அனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் தற்போது காகித பயன்பாட்டைக் குறைத்து டிஜிட்டல்மயமாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதற்குச் சிறிது காலம் எடுக்கும். உதாரணமாக, கல்வி அமைச்சில் முன்னர் பல்கலைக்கழக பேராசிரியர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான விடுமுறை விண்ணப்பக் கடிதம் அச்சிடப்பட்ட பிரதியாகவே அமைச்சுக்கு வந்தது. ஆனால் தற்போது அந்த முழுச் செயல்பாடும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் செயற்பாடு சார்ந்த கற்றல் செயல்முறையினால் புத்தகங்களின் சுமை குறைவடையும். புத்தகங்கள் வகுப்பறையிலேயே இருக்கும் என்பதால், இனிமேலும் புத்தகங்களை அங்குமிங்கும் எடுத்துச் செல்லவேண்டிய அவசியமில்லை. வேலை செய்து தவணையின் முடிவிலேயே புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.

2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் ஆண்டுக்கு தொகுதிகள் அடிப்படையிலான கற்றல் செயல்முறை அறிமுகப்படுத்தப்படும். தொகுதிகள் என்பது பெரிய புத்தகங்கள் அல்ல என்பதால், அந்தந்த பாடத்திற்கு ஏற்ப அந்தத் தவணைக்குரிய தொகுதி மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்படும். எனவே, இம்முறையின் மூலம் பிள்ளைகளின் புத்தகப் பாரம் பெருமளவு குறையும் என்றார்.