
அரசாங்கம் நாமல் ராஜபக்ஷ்வை கைது செய்து, பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் கூட்டத்துக்குக்கு பலத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது. அதேநேரம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆரம்பமாக லஞ்சம் வழங்கியவரை கைது செய்த பின்னர் லஞ்சம் பெற்றவரை கைதுசெய்திருக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சாமரசம்பத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற பாதுகாப்பு பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கம்) சட்மூலம் மீதான விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிக்கையில்,
நாமல் ராஜபக்ஷ் தவறு செய்திருந்தால், அவரை சிறைப்படுத்துவது தவறு இல்லை. ஆனால் சிறைப்படுத்தியிருக்கும் முறை முற்றாக பிழையாகும். ஏனெனில் நிமல் பெரேரா என்ற நபர் இந்த நாட்டில் மோசடிகளை செய்துவிட்டு, தற்போது நாட்டில் இருந்து தப்பிச்சென்றுள்ளார். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரமே நாமல் ராஜபக்ஷ்வை கைது செய்ய லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
ஆனால் லஞ்சம் வழங்குவதும் தவறு லஞ்சம் பெறுவதும் தவறு என்பதை ஆரம்பமாக இந்த விசாரணை ஆணைக்குழு தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆரம்பமாக லஞ்சம் வழங்கியவரை கைது செய்த பின்னர் லஞ்சம் பெற்றவரை கைதுசெய்திருக்க வேண்டும்.
ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கையை பார்க்கும்போது, அரசாங்கம் நாமல் ராஜபக்ஷ்வை கைது செய்து, அநுராதபுரத்தில் நடத்த இருக்கும் கூட்டத்துக்கு பெரும் பலத்தை வழங்கி இருக்கிறது. ஆனால் இவ்வாறான பலத்தை சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஆண்டு நிறைவு விழா கடந்த 2ஆம் திகதி இடம்பெற்றபோது அரசாங்கம் எமக்கு வழங்கவில்லை. சாமரசம்பத்தை கைது செய்து சிறையில் அடைத்திருந்தால், எமது கூட்டத்துக்கும் இன்னும் அதிகமாக மக்கள் வந்திருப்பார்கள்.
அதேநேரம் 3 நெடுஞ்சாலைகளை வெளிநாட்டு கடன் இல்லாமல் அமைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதனை நாங்கள் வரவேற்றிகிறோம். ஆனால் அவ்வாறு நெடுஞ்சாலைகள் அமைக்கும்போது அதற்கு தேவையான மூலப்பொருட்களை டொலர் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதேநேரம் நெடுஞ்சாலைகள் அமைக்கும் தரகுப்பணம் பெலவத்தையில் உள்ள டில்வின் சில்வா பிரைவட் லிமிடட்டுக்கு செல்லும். இன்று ஈ,பி.எப். , ஈ.டி,எப். இல் இருக்கும் பணத்தைவிட அதிக பணம் ரில்வின் சில்வா பிரைவட் லிமிடட்டில் இருக்கிறது.
மேலும் அர்ஜுன் மஹேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்கு அழைததுவருவதாக அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது தெரிவித்திருந்தது. ஆனால் இந்த அரசாங்கம் ஒருபோதும் அர்ஜுன் மஹேந்திரனை நாட்டுக்கு கொண்டுவரப்போவதில்லை.
அதேநேரம் மத்திய வங்கி மோசடி செய்த அர்ஜுன் மஹேந்திரனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கியது அரசாங்கத்தில் இருக்கும் பிரதான நிறுவனம் ஒன்றின் பிரதானியாகும். அவருக்கான கடவுச்சீட்டு எந்தவித நிபந்தனைகளும் இல்லாமலே அவருக்கும் வழங்கப்பட்டிருந்தது.
அதனால் அர்ஜுன் மஹேந்திரன் 3தடவைகள் வெளிநாட்டுக்கு சென்றுவந்தார். 4ஆவது தடவையே அவர் வெளிநாட்டுக்கு சென்று அவ்வாறே அங்கு தங்கினார்.
அர்ஜுன் மஹேந்திரனை வெளிநாட்டுக்கு அனுப்பிய அதிகாரியே இன்று இலங்கையில் மற்றவர்களை சிறைக்கு அனுப்பி வருகிறார். அதனால் இந்த அரசாங்கம் வீழ்த்தப்பட்டால், அர்ஜுன் மஹேந்திரனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு கடவுச்சீட்டு தயாரித்து கொடுத்த அந்த அதிகாரிக்கே முதலாவது வழக்கு தொடுக்கப்படும் என்றார்.




.jpg)




.webp)


