SLS தரச்சான்று இல்லாத மின் நீட்டிப்பு கம்பிகளை விற்ற நிறுவனத்திற்கு அபராதம்

கட்டாய SLS தரச்சான்று இல்லாத மின் நீட்டிப்பு கம்பிகளை விற்பனை செய்த தனியார் நிறுவனமொன்றுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

அத்துடன், கட்டாய குறைந்தபட்ச உத்தரவாதக் காலத்தை வழங்காமை மற்றும் சட்டரீதியாகச் செல்லுபடியாகும் விநியோகஸ்தர் பற்றுச்சீட்டுகள் இல்லாமல் பொருட்களை விற்பனைக்குக் காட்சிப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் நிறுவனத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகளால் நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

63ஆம் இலக்க பணிப்புரைக்கு அமைய, 250 வோல்ட் வரையான மின்சார உபகரணங்களில் பிளக்குகள், சாக்கெட்டுகள், மின் நீட்டிப்பு கம்பிகள், அடாப்டர்கள், பியூஸ் இணைப்பு அலகுகள், கன்வேர்ஷன் பிளக்குகள் மற்றும் கேபிள் ரீல்கள் ஆகியவை கட்டாயமாக SLS தரச்சான்றைக் கொண்டிருக்க வேண்டும்.

மின்சார உபகரணங்களைக் கொள்வனவு செய்யும்போது SLS தரச்சான்று மற்றும் உத்தரவாதக் காலத்தைச் சரிபார்ப்பதுடன், செல்லுபடியாகும் பற்றுச்சீட்டு அல்லது விலைப்பட்டியலைப் பெற்றுக்கொள்ளுமாறும் நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சார விபத்துகள் மற்றும் தீப்பரவல்களைத் தடுப்பதற்கு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியமானவை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.