இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக ரூ.12 இலட்சம் மோசடி – முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது



இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 12 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் நபரொருவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்டவர் என்பதுடன், கடந்த அரசாங்கக் காலத்தில் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பதும் விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாகப் பணியகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அலுவலகத்திற்குள் வரவழைத்து, அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டே சந்தேகநபர் இந்த பண மோசடியைச் செய்துள்ளார் என்பதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரைக் கைது செய்த சந்தர்ப்பத்தில், துறைமுகங்கள் மற்றும் விமானச் சேவைகள் அமைச்சின் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு நபர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காகப் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் சிலவும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சந்தேகநபர் நீண்டகாலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உயர் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி இவ்வாறான மோசடிச் செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளமை தொடர்பில் மேலதிகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.