இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை ஆட்சியாளர்கள் தமது மனதில் பதித்துக்கொண்டு செயற்பட வேண்டும் - மதுர விதானகே



இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை ஆட்சியாளர்கள் தமது மனதில் பதித்துக்கொண்டு செயற்பட வேண்டும் எனவும், இந்த பௌத்த நாட்டுக்கு எதிராகச் செயற்படும் எதேச்சதிகார அரசாங்கத்துக்கு எதிர்காலத்தில் அதன் விளைவுகள் நிச்சயம் கிடைக்கும் எனவும் சர்வஜன அதிகாரம் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் சனிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கட்சியின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி மதுர விதானகே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதன் விளைவுகள் எதிர்காலத்தில் வெளிப்படும். இந்தத் திருத்தத்தை மக்கள் கோரவில்லை. எதிர்க்கட்சிகளும் கோரவில்லை. குறைந்தபட்சம் நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள், நீதித்துறை சார்ந்தவர்கள் அல்லது சட்டத்தரணிகள்கூட இதனைக் கோரவில்லை. இவ்வாறு எவராலும் கோரப்படாத ஒரு திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.

இந்தத் திருத்தத்தின் விளைவுகள் தொடர்பில் தனியாகப் பேச வேண்டிய நிலை ஏற்படும். எந்தவொரு மக்கள் கோரிக்கையும் இல்லாத நிலையில் இத்தகைய அரசியலமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் ஏன் கொண்டுவந்தது என்பதற்கான பதில் எதிர்காலத்தில் அரசாங்கத்துக்கே கிடைக்கும். திசைகாட்டியின் கொள்கைப் பிரகடனத்தில்கூட குறிப்பிடப்படாத விடயங்கள் இந்தத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் திருத்தத்தின் விளைவுகள் இந்த அரசாங்கத்துக்கே பாரதூரமான முறையில் கிடைக்கும் என்பதே எமது நம்பிக்கையாகும்.

ரஷ்யாவில் போல்ஷெவிக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் இராணுவம், பொலிஸ் மற்றும் சட்டம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தமது கட்சித் தொண்டர்களை அந்தப் பதவிகளில் நியமித்து ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டது. அதேபோன்ற நிலைமைகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.

பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியதிகாரம் போன்றதொரு நிலை முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், அதற்கு எதிராக வலுவான மக்கள் எதிர்ப்பு உருவாகியுள்ளது. அதுபோன்று இலங்கையிலும் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், அதற்கான எதிர்விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும்.

தேர்தலுக்கு முன்னர் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர். மக்களின் வாக்குகளை கொள்ளையடித்ததாகக் கூறினாலும் அது தவறாகாது. பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொழும்பு மாவட்ட மக்கள் பெருமளவான வாக்குகளை வழங்கியிருந்த போதிலும், அந்த வாக்குகளை வழங்கிய மக்கள் ஜனநாயகத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் எதிராகச் செயற்படுவதற்காக வாக்களிக்கவில்லை.

திசைகாட்டியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மனச்சாட்சிக்கு எதிராக வாக்களித்ததாகவும், ஆளும் தரப்பில் சில பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் இறுதியில் அனைவரும் வாக்களித்ததாக பிமல் ரத்நாயக்க அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஜனநாயகத்துக்காகவும் சட்டத்தின் ஆட்சிக்காகவும் குரல் கொடுத்ததாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்த விடயத்தில் தனது மனச்சாட்சிக்கு எதிராகச் செயற்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் சிலர் உடலளவில் எதிர்க்கட்சியிலும், மனதளவில் ஆளும் கட்சியிலும் இருப்பதைப் போன்ற நிலை காணப்படுகிறது. இவ்வாறானவர்களை மக்கள் தற்போது அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தரப்பினர் இந்த நாட்டை அழிக்க முயற்சித்தனர். பிரபாகரன் உள்ளிட்டவர்களும் நாட்டை அழிக்க முயற்சித்தனர். அதேபோன்று 1505ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோர் 443 ஆண்டுகள் இந்த நாட்டுக்கு எதிராகச் செயற்பட்டனர்

எனினும், இந்த பௌத்த நாட்டுக்கு எதிராக எவராலும் செயற்பட முடியாது. அதற்கு இந்த நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள். இந்த பௌத்த நாட்டுக்கு எதிராகச் செயற்படும் எதேச்சதிகார அரசாங்கத்துக்கும் அதன் விளைவுகள் நிச்சயம் கிடைக்கும். இந்த பௌத்த நாட்டுக்கு எதிராகச் செயற்பட்ட எந்தவொரு ஆட்சியாளரும் தொடர்ந்தும் யதார்த்தமான முறையில் ஆட்சி நடத்த முடியவில்லை. ஆகவே, இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை ஆட்சியாளர்கள் தமது மனதில் பதித்துக்கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.