ஹெரோயினுடன் 14 பேர் கைது – WhatsApp மூலம் போதைப்பொருள் விற்பனை செய்த பிரதான சந்தேகநபரும் சிக்கினார்


ஹிங்குராக்கொட மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுச் சோதன நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிங்குராக்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிங்குராக்கொட தலைமையக பொலிஸாரும் ஹிங்குராக்கொட விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை (02) முன்னெடுத்த அவசர விசேட தேடுதல் நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 09 பேர் மின்னேரியா பகுதியையும், மூவர் ஹிங்குராக்கொட பகுதியையும், இருவர் மெதிரிகிரிய பகுதியையும் சேர்ந்தவர்களாவர்.

இவர்களிடமிருந்து மொத்தம் 10 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் ஹிங்குராக்கொட, ஆறாம் கட்டை பகுதியைச் சேர்ந்தவராவார்.

இவர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி நபர்களைத் தொடர்புகொண்டு, ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த போதைப்பொருள் வியாபாரி என்பது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 14 சந்தேகநபர்களும் இன்று சனிக்கிழமை (03) ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.