2 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது – காரும் மின்னணுத் தராசும் மீட்பு



கனேமுல்ல மற்றும் மாதம்பிட்டி பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 2 கிலோ கிராமுக்கும் அதிகளவிலான 'ஐஸ்' போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்டதிக்கந்தவத்தை பகுதியில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 01 கிலோகிராம் 849 கிராம் எடையுடைய 'ஐஸ்' போதைப்பொருள், கார் ஒன்று, மின்னணுத் தராசு மற்றும் 2 கைப்பேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு கிரிந்திவெல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வதுறுகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவராவார்.

மாதம்பிட்டி பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய, கொட்டாஞ்சேனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 520 கிராம் 150 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு-13 பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கைது நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.