
சர்வதே நாணய நிதியம் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக வரி அறவிடப்பட்டுள்ளதால், அரச வருமானம் இலக்குகளையும் தாண்டிச் சென்றுள்ளன. எனவே 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலாவது அரசாங்கம் வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ள புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு மக்களின் எழுத்தறிவை அதிகரிப்பது முக்கியமான ஓரு விடயமாகும். இதற்கு புத்தக வாசிப்பும், கல்வி நிறுவனங்கள் மூலம் பெறும் கல்வியைப் போலவே சுயகற்றலும் மிகவும் முக்கியம் பெறுகின்றன. புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்கள் தற்போது பல பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.
பதிப்பு மற்றும் அச்சு தொழிற்றுறைகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன. புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் மீது 18 சதவீதம் வரை வட் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வட் வரியையும், வட் வரம்பையும் நீக்க வேண்டும்.
உபகரணங்கள், அச்சுப் பொருட்கள் மற்றும் காகிதம் என்பவற்றின் விலைகள் அதிகமாக காணப்படுகின்றன. டிஜிட்டலோடு காணப்படும் இணைப்பு சமூகத்தில் சிறு தொகையினருக்கு மாத்திரமே இருப்பதாலும், புத்தகங்கள் தொடர்பான வட் வரி உள்ளிட்டவற்றை வெளியீட்டுத் துறையிலிருந்து நீக்கி, அத்துறைக்கு ஊக்கமளிக்க வேண்டும்.
நவம்பர் 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதால், வெளியீட்டு மற்றும் அச்சுத் துறையின் முன்னேற்றத்திற்காக வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அரசாங்கம் இதில் கூடிய கவனம் எடுத்துச் செயற்பட வேண்டும். நாட்டு மக்களே கடுமையான வரிச்சுமைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
நாணய நிதியம் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக வரி அறவிடப்பட்டுள்ளதால், அரச வருமானம் இலக்குகளையும் தாண்டிச் சென்றுள்ளன. எனவே வரவு செலவுத் திட்டத்தில் வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். சமூக ஜனநாயக அணுகுமுறைகள் பின்பற்ற வேண்டும்.
மேலும், அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை நடைமுறை யதார்த்தமாக்க வேண்டும். இத்துறையை மேம்படுத்தத் தேவையான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியில் இருக்கும் சந்தர்ப்பங்களில் போலவே அரச அதிகாரம் கிடைக்கும்போதும் வெளியீட்டுத் துறையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளைஞர்கள், பிள்ளைகள் மற்றும் மொத்தம் 220 இலட்சம் மக்களின் எழுத்தறிவைக் கருத்தில் கொண்டு, புத்தக வெளியீட்டுத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.



.jpg)








