இலங்கைக்கு அருகே அமெரிக்கத் தடைக்குள்ளான சுமார் 20 ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் – சர்வதேச ஊடகம் தகவல்



அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட ஈரானிய மற்றும் ஈரானுடன் தொடர்புடைய சுமார் 20 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இலங்கையின் கடற்பிராந்தியத்துக்கு மிக அருகாமையில் தரித்து நிற்பதாகவும், இதன் காரணமாக இலங்கை சிக்கலானதொரு கடல்சார் இராஜதந்திர சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானிய மற்றும் ஈரானுடன் தொடர்புடைய 20 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்குக்கரையில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில் தரித்து நிற்பதாகவும், அவற்றில் சில கப்பல்கள் உணவு, குடிநீர் மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கப்பல்கள், தடை விதிக்கப்பட்ட ஈரானிய மசகு எண்ணெயை சீனாவுக்குக் கொண்டுசெல்வதில் ஈடுபட்டிருந்த ஈரானுடன் தொடர்புடைய கப்பல் தொகுதிகளின் ஒரு பகுதியாகும் எனவும், ஈரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடைய கப்பல்களுக்கு அவசியமேற்படும் சேவைகளை வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான அழுத்தத்தை அமெரிக்க அரசாங்கம் தீவிரப்படுத்தியிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'இந்தக் கப்பல்கள் வழமையாக ஈரானிய மசகு எண்ணெயை மலேசியாவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்புக்குக் கொண்டுசெல்லும். அங்கு அந்த மசகு எண்ணெய் ஏனைய கப்பல்களுக்கு மாற்றப்பட்டு, அதன்பின்னரே அவை சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும். மசகு எண்ணெய் ஏனைய கப்பல்களுக்கு மாற்றப்பட்டதன் பின்னர், மீண்டும் சரக்குகளை ஏற்றுவதற்காக இந்தக் கப்பல்கள் ஈரானுக்குத் திரும்பும்.

இருப்பினும் அமெரிக்காவின் முற்றுகை மற்றும் பரந்துபட்ட தடைகள் இந்தச் செயன்முறையில் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதுடன், மசகு எண்ணெயை இறக்கிய கப்பல்கள் ஈரான் துறைமுகங்களுக்கு திரும்பமுடியாத அல்லது திரும்ப விரும்பாத நிலையைத் தோற்றுவித்துள்ளன' என்றும் அச்செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதேபோன்று இலங்கையின் கடற்பரப்புக்கு வெளியே, பிரத்யேக பொருளாதார வலயத்துக்கு அருகாமையில் ஈரானியக் கொடியிடப்பட்ட கப்பல்கள் தரித்து நிற்பதாக அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், இலங்கையைப் பொறுத்தமட்டில் இந்தக் கப்பல்கள் தரித்துநிற்கும் சூழமைவு கடற்பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர அணுகுமுறை சார்ந்து ஒரு சிக்கலான நிலையைத் தோற்றுவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'இக்கப்பல்கள் இலங்கைக்கு அருகாமையில் தரித்து நின்றாலும், நாட்டின் கடற்பரப்புக்கு வெளியே நிற்பதனால், அவற்றின் மீது இலங்கை அரசுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே உள்ளன. அதேவேளை தடை விதிக்கப்பட்ட கப்பல்களுக்கான சேவைகளை வழங்கும் பட்சத்தில் வெளியக அழுத்தங்களுக்கு உள்ளாக நேரலாம்' என்றும் அதில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.