
நியூசிலாந்தில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாயை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் ஆண்பெண் இருபாலருக்கும் இந்த வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை வழங்குவதாகக் கூறி, அவர்களுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களுடன் விசாரணைகளுக்காகப் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய, சந்தேக நபர் வெள்ளிக்கிழமை (03) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நீண்ட காலமாக விசாரணைப் பிரிவுக்கு தலைமறைவாகி வந்தவர் என பணியகத்தின் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை,இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 12 இலட்சம் ரூபாயை மோசடி செய்த நபர் ஒருவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திற்காகப் போட்டியிட்டவராவார். அத்துடன், அவர் நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளராக ஆள்மாறாட்டம் செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான அலுவலகத்திற்குள் குறித்த முறைப்பாட்டாளரை அழைத்து வந்து, நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு இந்த மோசடியை இழைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதைத் தொடர்ந்து, எதிர்வரும் 14.ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்த, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் அலுவலக உதவியாளர் பதவிகளுக்காக ஆட்களைத் தெரிவு செய்வதற்காக போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உயர் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, அறிமுகங்களைக் காட்டி இந்த மோசடிச் செயல்கள் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பல்வேறு அரச நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.அதேபோன்று, நாடளாவிய ரீதியில் பணம் மோசடி செய்தமை தொடர்பான முறைப்பாடுகளும் சந்தேக நபருக்கு எதிராக பதிவாகியுள்ளதாகவும் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் போது, பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எவரும் தமது விபரங்கள், பணம், கடவுச்சீட்டு ஆகியவற்றை வழங்குவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இந்த மோசடி செயல்கள் தொடர்பில் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.



.jpg)







.jpg)
