363 கிராமுக்கும் அதிக ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது


நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (02) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 363 கிராமுக்கும் அதிக ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்ஃபிட்ஸ்டோன் வீதிப் பகுதியில் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 304 கிராம் 520 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 04 கைப்பேசிகளுடன் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகந்தெனிய பகுதியில் கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 59 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞராவார்.

மேலும், இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் கொட்டாஞ்சேனை மற்றும் கணேமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.