ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழல் வழக்கு: அரவிந்த டி சில்வா தம்பதியின் 4 கோடி ரூபா பிணைப் பணம் அரசுடமையாக்கம்!


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பான வழக்கில், அந்நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலிக்கு பிணை நின்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியின் 4 கோடி ரூபா பிணைப் பணத்தை அரசுடமையாக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு ஊழல் வழக்கில் சந்தேகநபராகக் கைது செய்யப்பட்ட பிரியங்கா நியோமாலி, முன்னர் தலா 20 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அச்சந்தர்ப்பத்தில், பிரியங்கா நியோமாலிக்கு பிணைப் பிணையாளர்களாக அவரது சகோதரியான பிரியங்கி நியோமாலி விஜேநாயக்க மற்றும் அவரது கணவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா ஆகியோரே நீதிமன்றத்தில் பிணைப் பத்திரங்களில் கையொப்பமிட்டிருந்தனர்.

பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி நீதிமன்றத்தைப் புறக்கணித்து வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அல்லது தவறும்பட்சத்தில் பிணைப் பணம் அரசுடமையாக்கப்படும் என பிணையாளர்களான அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கும் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதனடிப்படையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.